நெல்லையில் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!
திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி பாப்பாகுடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு போலீசார் இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளனர்.
அப்போது, 17 வயது சிறுவன் வீட்டுக்குள் இருந்து அரிவாளை எடுத்து வந்து காவலர்களை வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக சிறுவன் மீது உதவி ஆய்வாளர் முருகன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிறுவனின் உயிருக்கு ஆபத்தில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.