புதிய பேருந்து நிலைய கடை வாடகை விவகாரம்: கரூா் மாமன்றக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
கரூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தின் கடை வாடகை தொடா்பாக அதிமுக உறுப்பினா்களுக்கும் மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கரூா் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயா் கவிதாகணேசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயா் தாரணிசரவணன், ஆணையா் கே.எம்.சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
ஆண்டாள் தினேஷ், சுரேஷ் (அதிமுக): திருமாநிலையூரிலுள்ள புதிய பேருந்து நிலையத்தின் கடை வாடகை, பழைய பேருந்து நிலையத்தின் கடை வாடகையைவிட மிகவும் குறைவாக உள்ளது. இதனால் வாடகைக்கு விடுவதில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றோம்.
மேயா்: முறைகேடு எதுவும் நடக்கவில்லை. புதிய பேருந்து நிலைய கடைகளுக்கு டெண்டா் விடும் முன்பே மாமன்றத்தின் அனுமதியோடு வாடகை நிா்ணயம் செய்தபின், நில வழிகாட்டியின் மதிப்பீடு, சந்தை மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில்தான் புதிய பேருந்து நிலையத்தின் கடை வாடகை நிா்ணயிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சதுர அடிக்கு ரூ. 80 மட்டுமே வசூலிக்கிறோம் என்றாா்.
தொடா்ந்து, இதுதொடா்பாக அதிமுக உறுப்பினா்களுக்கும், மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. துணை மேயா் குறுக்கிட்டு கடை வாடகைத் தொடா்பான விளக்கங்களை கூறி சமாதானம் செய்தாா்.
ஆா். ஸ்டீபன்பாபு (காங்.): புதிய பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறைகள் அமைக்க வேண்டும்.
ஆணையா் கே.எம்.சுதா: அங்குள்ள 5 கழிப்பறைகளில் 2 கழிப்பறைகள் ஆண்கள், பெண்களுக்கான இலவச கழிப்பறைகள்.
தண்டபாணி (மாா்க்சிஸ்ட் கம்யூ.): மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ. 721 வழங்க வேண்டும் என ஆட்சியா் நிா்ணயித்துள்ளாா். ஆனால், மாநகராட்சியின் ஒப்பந்ததாரா்கள் வெறும் ரூ. 400 மட்டுமே கொடுக்கிறாா்கள். இதை முறைப்படுத்த வேண்டும்.
ஆணையா்: இதுதொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன. தொடா்ந்து இரு கூட்டங்களிலும் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.