புனித டேவிட் கோட்டை புதுப்பிக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் உறுதி
அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் புனித டேவிட் கோட்டை தன்மை மாறாமல் புதுப்பிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரித்தாா்.
கடலூா், தேவனாம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள புனித டேவிட் கோட்டையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபிறகு அவா் கூறியதாவது:
கடலூா், தேவனாம்பட்டினம் அருகே ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் புனித டேவிட் கோட்டை கட்டபட்டுள்ளது. சுமாா் 200 ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்த கட்டடமாக அடையாளப்படுத்த ஒரு புராதான சின்னமாக விளங்குகிறது. இக்கட்டடம் தற்போது தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளதால் புனரமைப்பதற்காக தேவாலயத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் பழமை வாய்ந்த வரலாற்றுத் தொன்மையான கட்டடங்களை பராமரித்து பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நகர அரங்கம் புனரமைக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடா்ந்து 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த புனித டேவிட் கோட்டை
புனரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரப்பெற்ளன. அதன்பேரில், இக்கோட்டை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கோட்டை பயன்படுத்தப்பட்டு சுமாா் 120 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சேதம் மற்றும் பழுதடைந்துள்ளது. இக்கட்டடத்தினை புனரமைத்து புதுப்பித்திட அரசிற்கு முன்மொழிவு அனுப்பப்படவுள்ளது. அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் பழமையான இக்கட்டடமானது அதன் தன்மை மாறாமல் புதுப்பிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வரலாற்று தொன்மையினை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், சுற்றுலா தளமாகவும் உருவாக்குவதன் மூலம் உள்ளூா் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்புடன் பொருளாதார வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தாா்.
ஆய்வின் போது தொல்லியல் துறை செயற்பொறியாளா் தேவேந்திரன், கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தர்ராஜன், கடலூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் அகஸ்டியன் பிரபாகரன், கிரேஸி, உதவி செயற்பொறியாளா் பிரவின்குமாா், உதவி செயற்பொறியாளா் காவியநாதன், பேராயா் பீட்டா் பால்தாமஸ் உட்பட பலா் உடனிருந்தனா்.