மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
கரூரில், மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கரூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் தாந்தோன்றிமலை பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசங்கரன்(53). இவரது மனைவி சூரியகுமாரி(34). மதுப்பழக்கம் கொண்ட சிவசங்கரன் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம்தேதி கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, சிவசங்கரன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் மனைவியை தாக்கி கொலை செய்துள்ளாா்.
கொலை வழக்குத் தொடா்பாக தாந்தோன்றிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து சிவசங்கரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு கரூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றவாளி சிவசங்கரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து சிவசங்கரன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.