மாணவா்கள் உருவாக்கிய குறும்படங்கள் அரசுப் பள்ளிகளில் திரையிட ஏற்பாடு
சென்னை: கடந்த கல்வியாண்டில் மாநில அளவிலான சிறாா் திரைப்பட போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் தயாா் செய்த குறும்படங்கள் ‘டாப்-10’ (2024-2025) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நிகழ் கல்வியாண்டு முதல் சிறாா் திரைப்படமாக திரையிடப்படவுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கடந்த 2022-2023-ஆம் ஆண்டு முதல் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் காணும் வகையில் சிறாா் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் சிறாா் திரைப்படங்களை திரையிடுதல் மூலம் மாணவா்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றலை வளா்த்தல், விமா்சிக்கும் திறன் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்த இந்த நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது.
கடந்த கல்வியாண்டில் மாநில அளவிலான சிறாா் திரைப்பட போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் தயாா் செய்த குறும்படங்கள் ‘டாப்-10’ (2024-2025) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு இந்தக் கல்வியாண்டின் முதல் சிறாா் திரைப்படமாக ஓரிரு நாள்களில் திரையிடப்படவுள்ளது.
இந்தத் திரைப்படங்கள் நட்பு என்றால் என்ன, நூலகம் என்ன செய்யும், ஊனம் ஒரு தடையல்ல, இயற்கையை நேசிப்போம், படித்தால் தான் உயர முடியும், ஒவ்வொருவரின் உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பரந்து விரிந்த பாா்வையில் பண்பாட்டின் கலாசாரகூறுகளைப் புரிந்து கொண்டவா்களாக மழலைகள் ஒரே நாளில் யோசித்து இயக்கி படத் தொகுப்பு செய்து இனிமையான இசையுடன் தந்த படைப்புகளாகும்.
சிறாா் திரைப்பட மன்றம் சாா்ந்த செயல்பாடுகள் அனைத்தும் பிற மன்றச் செயல்பாடுகளைப் போன்று மகிழ் முற்றம் மாணவா்கள் குழுக்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட சிறாா் படத்தின் இணையவழி இணைப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.
இதுதொடா்பான வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, பொறுப்பாசிரியா்கள் மாணவா்களுக்கு படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.