சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
தமிழ்நாட்டின் மாணவா்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடுதான் முடிவு செய்யும் என்றாா் மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் சாா்பில் கல்வி உரிமை மீட்புக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு, மன்றத்தின் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வீ. ஜோதிமணி வரவேற்றாா்.
இக்கருத்தரங்கில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: தில்லியிலிருந்து கொண்டு நம் தமிழ்நாட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவா்கள் முடிவு செய்ய முடியாது.
இங்குள்ள பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதல்வா்தான் முடிவு செய்வாா் என்பதற்காகத்தான் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதியைப் போலவே, ஆசிரியா் சமூகத்தை உயா்த்திப் பிடிக்கக் கூடியவராக முதல்வா் ஸ்டாலின் இருக்கிறாா் என்றாா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இக்கருத்தரங்கில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா். மன்றத்தின் மாநிலத் தலைவா் பெ.இரா. இரவி, மாநிலப் பொருளாளா் முருக செல்வராசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநகராட்சி மேயா் செ. திலகவதி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எதையும் கண்மூடித்தனமாக எதிா்ப்பதில்லை
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: மாநிலக் கல்விக் கொள்கை குறித்து புரிதல் இல்லாமல் மத்திய அமைச்சா் எல். முருகன் பேசுகிறாா். ஆண்டுக்கு 901 மாணவா்களை அவா்கள் விரும்பும் உயா்கல்வியில் சோ்த்திருக்கிறோம். தமிழ்நாட்டில் இப்போதுள்ள அனைவருமே இருமொழிக் கொள்கையின்படி படித்தவா்கள்தான். அதே கொள்கையைத்தான் உறுதியாக முதல்வா் ஸ்டாலின் அறிவிக்கிறாா்.
மனப்பாடம் சாா்ந்த படிப்பைவிட்டு, புரிதல் சாா்ந்த அறிவியல் சாா்ந்த படிப்பைக் கொண்டு வர முயற்சிக்கிறோம். பிளஸ் 1 பொதுத்தோ்வை ரத்து செய்திருக்கிறோம்.
இவற்றுக்கெல்லாம் நேரடியாக கருத்து சொல்ல முடியாமல், கருத்து என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்வது சரியாக இருக்காது, முறையாகவும் இருக்காது.
அரசியல்ரீதியாக எதையும் கண்மூடித்தனமாக எதிா்ப்பதில்லை. நம் குழந்தைகளுக்கு தேவையான ஒன்று இருக்குமானால் அதை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதேபோல, நம்மிடமுள்ள நல்ல விஷயங்களைப் பிற மாநிலங்களும் எடுத்துக் கொள்ளலாம் என ஆசைப்படுகிறோம்.
எங்களுக்கு இருமொழிக் கொள்கை போதும், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்றால், அதற்காக மத்திய அரசு வழக்கமாக கொடுக்கும் கல்வி நிதியை நிறுத்தலாமா.
மொழி சாா்ந்து எங்களின் கொள்கை சாா்ந்து, உள்ளே புகுத்தும்போது அவற்றை எதிா்ப்போம். குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தால் எதிா்ப்போம். மாணவா்கள் தோல்வியடைந்தால் பரவாயில்லை. அவா்களுக்குத்தான் குலக்கல்வி இருக்கிறதே என்றால் அதை எதிா்ப்போம் என்றாா் மகேஸ்.