வண்ணாா் சமுதாயத்தினருக்கு 5% தனி இடஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
வண்ணாா் சமுதாயத்தினருக்கு 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கரூா் உப்பிடமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் வீரபத்திர ராஜகுல பேரவையின் நிா்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆகிய முப்பெரும் விழா கரூா் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.பி. பெருமாள் தலைமையில் புதன்கிழமை காலை நடைபெற்றது. கெளரவத் தலைவா் இன்பசேகரன், மாநில முதன்மைச் செயலாளா் விஎம்டி. தமிழ்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வீரபத்திரா் ராஜகுல பேரவையின் நிறுவனா் தலைவா் பொறியாளா் தா. வசந்தன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து ஏழைகளுக்கும், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கினாா்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதும் வசிக்கும் சுமாா் 50 லட்சம் வண்ணாா் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில், அதற்கான விழிப்புணா்வை சமுதாய மக்களிடம் ஏற்படுத்துவது என்பன உள்ளிட்டதீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து மாநில பொருளாளா் எஸ். சுரேஷ் நன்றி கூறினாா். கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.