வாணியம்பாடி: கழிவறையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த நகராட்சி!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்தே காணப்படும். இதற்கிடையே சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை திட்டமிட்டபோது வாணியம்பாடி நகரை ஒட்டி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி கடந்து செல்கின்றன .
இந்த புறவழிச்சாலையின் இரு புறமும் வாணியம்பாடி நகராட்சி சார்பாக பயணியர் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது .
இதில் சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நின்று செல்லவும்... பயணிகள் வசதிக்காகவும் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்திற்கு, பெங்களூரு , ஓசூர் , சேலம் , தருமபுரி , திருப்பத்தூர் போன்ற நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்னை மற்றும் வேலூர் மார்க்கமாக தினசரி இந்த நிறுத்தத்தை கடந்து செல்கின்றன.

இந்த பயணியர் நிழற்கூடத்தை ஒட்டி பொது கழிவறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறையின் தற்போதைய நிலை எட்டி பார்க்கக்கூடமுடியாத அளவில் இருக்கிறது . பயன்பாட்டிற்கு வந்து பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்ததா அல்லது பயன்பாட்டிற்கு வராமலே பழுதடைந்ததா இந்த கழிவறை என்ற குழப்பம் தான் ஏற்படுகிறது.
உள்ளே நுழையமுடியாதவாறு குவிந்து கிடக்கும் குப்பைகளை தாண்டி உள்ளே எட்டி பார்த்தால் வாணியம்பாடி நகராட்சியில் சேகரிக்கப்படும் மொத்த குப்பைகளை இங்குதான் கொட்டுகிறார்களோ என்று எண்ணுமளவுக்கு குப்பைகள் குவிந்து கிடந்தன .
இந்த கழிவறையின் உள்ளே குவிந்துள்ள குப்பைகள் மக்கி போய் துர்நாற்றம் வீசுவது குறித்தும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு வீசி சென்றுள்ள ஏராளமான மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பிரச்னை குறித்தும் மேற்கத்திய பாணியில் உள்ள கழிவறையில் பாதி காணாமலும் மீதி சிதிலமடைந்தும் இருந்ததையும் இங்கு வரும் பயணிகளுக்கு அவசர ஆத்திரத்திற்கு ஒதுங்க கூட அருகாமையில் எந்த கழிப்பறை வசதியும் இல்லாமல் இருந்தது குறித்தும் பயணிகள் தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், "எங்களுக்கு தெரிந்து இந்த டாய்லெட்டை யாரும் யூஸ் பண்ண மாதிரி தெரியல. மது குடிக்கிறவங்க தண்ணி அடிக்கவும் இரவு நேரத்தில் தவறான செயல்களுக்கு பயன்படுத்தற மாதிரிதான் தெரியுது. ஆண்களுக்கு பரவாயில்லை... அவசரம்னா அந்த பக்கம் திறந்தவெளியில் ஒதுங்கிடறாங்க .. பெண்கள் நிலை தான் பாவம்" என்று குமுறினர்.





வாணியம்பாடி நகராட்சி ஆணையர் முஸ்தபாவை அப்போதே தொடர்பு கொண்டு விவரங்களைச் சொன்னதும்... ``என்னது... அந்த கழிவறை பயன்பாட்டில் இல்லையா? " என்று வியப்பாக கேட்டார் . நாம் பதிவு செய்திருந்த சில புகைப்படங்களை ஆதாரமாக அனுப்பி வைத்தோம். ``ஃபீல்ட் விசிட் போயிட்டு உங்களுக்கு அப்டேட் செய்கிறேன்" என்றவர், உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தததையும் கடந்த 15.04.2025 அன்று நமது விகடன் இணையதளத்தில் வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை... அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நகராட்சி ஆணையர் முஸ்தபா நம்மிடம் உறுதி அளித்தபடி உடனடி நடவடிக்கைகளில் இறங்கியதை அறிந்தோம். வந்த தகவல்களை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு 22.05.2025 அன்று நேரில் பார்வையிட்டோம். இரண்டு கழிவறைகளும் சுத்தம் செய்யப்பட்டு கதவுகளும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. தண்ணீர் குழாய்கள் புதியதாக பொருத்தப்பட்டு தொடர்ந்து தண்ணீர் வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குவிக்கப்பட்டிருந்த குப்பை முழுமையாக அகற்றப்பட்டு அணுகுவதற்கு எளிதாக உள்ளது.
வெளியில் பழுதடைந்திருந்த கை கழுவும் தொட்டியின் குழாய்களை மாற்றாமல் புதியதாக துளையிட்டு புது குழாய் பொருத்தபட்டுள்ளது. அங்கிருந்த பயணிகள் , போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆகியோரிடம் பேசியதில், நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த இந்த கழிவறை கடந்த ஒரு மாத காலமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் , தினசரி சுத்தம் செய்வதாகவும் சொன்னார்கள். கூடவே தண்ணீர் பயன்படுத்த சிறிய பக்கெட்டோ , வாளியோ வைத்தால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும் என்றார்கள்.
நடவடிக்கைக்கு நன்றி சொல்லி... இருக்கும் சிறு குறைகளை கவனத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டு நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டோம். அழைப்பு ஏற்கப்படவில்லை. நாம் பார்வையிட்டு வந்த மறுநாள் அவர் வேறு நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு செய்திகள் தெரிவிக்கின்றன.
நடவடிக்கை எடுத்த நகராட்சிக்கு விகடன் சார்பாக நன்றி.