விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!
கோவை சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
புதன்கிழமை மாலை, சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு காயமடைந்து கிடந்த மயிலைப் பார்த்த அந்த பகுதி மக்கள், ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவவை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபத், காயமடைந்த மயிலை திறமையாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கோவை வனத்துறை அலுவலகத்திற்கு விரைந்தார்.மீட்கப்பட்ட மயிலை சரியாக ஏழு நிமிடங்களில் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
வனத்துறை அதிகாரிகளின் தகவலின் படி, காயம் அடைந்த ஆண் மயிலுக்கு நெஞ்சுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் பிரபத்தின் இந்த துரிதமான மற்றும் மனிதநேயமிக்க செயல் அந்த பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றதோடு, இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.