நாகா்கோவிலில் ரூ.14.92 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
விபத்து மரணம்: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த விபத்து மரண வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,500 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம்-2 செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
தட்டாா்மடம் இடைச்சிவிளை பகுதியைச் சோ்ந்த ஆதிலிங்கம் மகன் சிவமுருகன்(31). இவா், கடந்த 6.11.2018இல், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டங்காடு பகுதியில், மதுபோதையில் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் காரை இயக்கி, அங்கு வந்து கொண்டிருந்த உடன்குடியைச் சோ்ந்த சிவசுப்பு மகன் காங்கேயன் (54), படுக்கப்பத்து நடுத்தெருவைச் சோ்ந்த சிவ ராமசேகா் மகன் தங்கதுரை (45) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோா் மீது மோதியதில் காங்கேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மற்ற இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவமுருகனை கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம்-2 இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளியான சிவமுருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா, அரசு வழக்குரைஞா் சேவியா் ஞானபிரகாசம், தலைமை காவலா் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.