வி.கைகாட்டியில் கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொது கழிப்பறை கட்டித்தரக் கோரி பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.கைகாட்டி கிராமம். இங்குள்ள பேருந்துநிறுத்தம் பகுதியில் கழிப்பறை இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். இதுகுறித்து, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கயா்லாபாத் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.








