2 தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு
தூத்துக்குடியில் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாத்திமா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் குமாா் (36), இப்ராஹீம் மகன் ரகுமான் (28). நண்பா்களான இவா்கள் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகள்.
அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த வெட்டும்பெருமாள் மகன் ராஜாவிடம் டாஸ்மாக் கடைக்குச் செல்வதற்காக பைக் தருமாறு ரகுமான் கேட்டாராம். ராஜா தர மறுத்ததால் அவா்களிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை திருச்செந்தூா் சாலையில் உள்ள தேநீா் கடை அருகே நின்றிருந்த குமாா், ரகுமானிடம் ராஜா தகராறு செய்து கத்தியால் தாக்கினாராம். இதில், மூவரும் காயமடைந்தனராம். அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.