இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
20 பாட்டில் விஷ முறிவு மருந்து; 72 மணி நேர போராட்டம்-11 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பட்லுார், சொக்கநாத மணியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர். இவரது மகன் ஜெயசூர்ய குமார் (11).அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூன் 26-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஜெயசூர்யகுமாரை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதையடுத்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஜெயசூர்யகுமார் அனுமதிக்கப்பட்டார். பாம்பின் விஷம் அதிக வீரியமாக இருந்ததால், ஜெயசூர்யகுமார் சுய நினைவை இழந்தார். உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த ஜெயசூர்யகுமாருக்கு,விஷ முறிவு மருந்து வழங்கி, இரண்டு நாள்கள் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். பின், 10 நாள்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், ஜெயசூர்யகுமார் முழுமையாக குணமடைந்தார்.

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், ''கட்டுவிரியன் பாம்பு கடித்தால் கடும் வயிற்று வலி ஏற்பட்டு, நரம்பு மண்டலம் பாதித்து உயிரிழப்பு ஏற்படும். ஜெயசூர்யகுமாரை கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் சுயநினைவை இழந்தார். 20 பாட்டில் விஷ முறிவு மருந்து அவருக்கு வழங்கப்பட்டது. 72 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. 10 நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஜெயசூர்யகுமார் தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளார்" என்றனர்.