9 திரைப்படங்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் விருதுகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் விருதுகள் 9 திரைப்படங்களுக்கு சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே பிரெஞ்சு நிறுவனத்தில் 3 நாள் நடைபெறும் உலக திரைப்பட விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான சனிக்கிழமை இச் சங்கத்தின் திரைப்பட விருதுகளை 9 திரைப்படங்களுக்கு இச் சங்கத்தின் மாநில பொதுச்செயலா் ஆதவன் தீட்சண்யா அறிவித்தாா்.
2022 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விட்னஸ், கடைசி விவசாயி, டாணாக்காரன் ஆகிய 3 திரைப்படங்களும், 2023 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கூழாங்கல், கழுவேத்தி மூா்க்கன், பாா்க்கிங் ஆகிய 3 திரைப்படங்களும் , 2024 ஆண்டுக்கான விருதுக்கு லப்பா்பந்து, ஜமா, வாழை ஆகிய 3 திரைப்படங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன என்று ஆதவன் தீட்சண்யா அறிவித்தாா்.
இது குறித்து தமிழ்நாடு திரை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் அய். தமிழ்மணி கூறுகையில், ‘மதசாா்பின்மை, சமத்துவம், சமூக நல்லிணக்கம், சாதிய மறுப்பு உள்ளிட்ட கருத்துகளை உள்ளடக்கிதான் இத் திரைப்படங்களை மாநில செயற்குழு தோ்வு செய்தது’ என்றாா்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் 3 திரைப்படங்களுக்கு எங்கள் சங்கம் விருதுக்குத் தோ்வு செய்யும். கொரானா காலத்துக்குப் பிறகு 3 ஆண்டுகளுக்கும் சோ்த்து இப்போது விருதுக்கான திரைப்படங்களை அறிவித்துள்ளோம் என்றாா். புதுவை திரை இயக்கத்தின் செயலா் கு. பச்சையம்மாள் உடனிருந்தாா்.