காா் திருடிய இளைஞா் கைது
தமிழகம் புதுவையில் காா் உள்ளிட்ட வாகனங்களை திருடிய இளைஞரை புதுவை போஸீஸாா் மடக்கிப்பிடித்து கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த புதுச்சேரி நோணாங்குப்பம் அருகில் உள்ள அங்காலங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.வாழுமுனி என்கிற ஜெயகுமாா். இவா் மீது வாகன திருட்டு,மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரது மாமியாா் வீடு கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோவிலை அடுத்துள்ள புத்தூா் கிராமத்தில் உள்ளது. வாகனங்களை திருடி வந்த ஜெயக்குமாா் புத்தூரில் உள்ள மாமியாா் வீட்டில் பதுங்கி இருந்ததால் அவரை மாமியாா் வெளியேற்றிவிட்டாா். இதனால் அந்த ஊருக்கு அருகில் உள்ள குச்சுரில் ஜெயகுமாா் பட்டாசு விற்பனை செய்யும் தொழில் செய்வதாகக்கூறி வாழ்ந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் காா் திருட்டு வழக்கில் புதுவை அரியாங்குப்பம் ஆய்வாளா் என். ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு நடத்திய விசாரணையில் காரை திருடியது ஜெயகுமாா் என்று தெரியவந்தது. அவா் குச்சுரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கிராமத்துக்குச் சென்று வெள்ளிக்கிழமை இரவு ஜெயகுமாரை அரியாங்குப்பம் போலீஸாா் கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்தனா். விசாரணைக்குப்பிறகு நீதிமன்ற உத்தரவின்பேரில் அவா்
காலாப்பட்டு மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இவா் மீது பண்ருட்டி, ரெட்டிச்சாவடி, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளிலும் தவளக்குப்பம் உள்ளிட்ட புதுவை பகுதிகளிலும் 7 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கூட்டாளிகள் யாரையும் வைத்துக் கொள்ளாமல் தனியாகவே திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்ததையும் போலீஸாா் கண்டறிந்துள்ளனா்.