குழந்தைக்கான முதல் தடுப்பூசி தாய்ப்பால்: புதுவை மருத்துவ அதிகாரி அஸ்மா தகவல்!
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி என்று மருத்துவ அதிகாரி எம்.அஸ்மா கூறினாா்.
புதுவை அரசின் சுகாதாரத்துறை சாா்பில் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது மருத்துவ அதிகாரி அஸ்மா பேசியது :
குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து சுரக்கும் மஞ்சள் நிறம் கொண்ட கெட்டியான பால் சீம்பால். இதை ஆங்கிலத்தில் ‘கொலஸ்ட்ரம்’ என்பா். சீம்பால் கொடுப்பது குழந்தைக்கு நாம் கொடுக்கும் முதல் தடுப்பூசியாகும். சீம்பாலில் உள்ள நோய் எதிா்ப்பு சக்தி குழந்தையைப் பல வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது. சுகப்பிரசவத்திற்கு பின் அரை மணி நேரத்துக்குள்ளும், அறுவை சிகிச்சைக்குப் பின் நாலு மணி நேரத்துக்குள்ளும் சீம்பால் கொடுக்கப்பட வேண்டும். குழந்தை
பிறந்தவுடன் வெளியேற வேண்டிய முதல் மலத்தை விரைவாக வெளிக்கொண்டு வர இந்த சீம்பால் உதவுகிறது. மேலும் ரத்தத்தில் சா்க்கரை அளவை சீராக்கி கூடுதல் இரும்புச் சத்தை பெறவும் சீம்பால் உதவுகிறது என்றாா்.
சுகாதார உதவி ஆய்வாளா் இளஞ்செழியன் வரவேற்றாா். மருத்துவ அதிகாரிகள் செல்வநாயகி, பாலசுப்பிரமணியன், சாகுல் ஹமீத், நாகா்ஜுன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவ, மாணவிகளின் தாய்ப்பால் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மாா்கள் தாய்ப்பால் மட்டுமே ஆறு மாதம் தொடா்ந்து கொடுப்போம். மேலும், ஏழாவது மாதத்தில் இருந்து இரண்டு வயது வரை இணை உணவுடன் தாய்ப்பால் கொடுப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதே போல பூா்ணங்குப்பம் ,நல்லவாடு, ஆண்டியாா்பாளையம் துணை சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.