``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
அல்லாபாத் ஏரி அழகுபடுத்தும் பணி விரைவில் நிறைவு: காஞ்சிபுரம் மேயா்
காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் உள்ள அல்லாபாத் ஏரி நடைபயிற்சிக்கான சுற்றுச்சுவருடன் அழகுபடுத்தும் பணி விரைவில் நிறைவு பெறும் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்தாா்.
திருக்காலிமேட்டில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் முள்புதா்களும் மண்டி, பெரிய காடு போல இருந்த ஏரியை முழுவதுமாக தூா்வாரி, செப்பனிட்டு நகருக்கு சிறந்த நீா் ஆதாரமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனா். இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முயற்சியில் எக்ஸ்னோரா இண்டா்நேஷனல் அமைப்பும், கோமெட்சு தொழிற்சாலையும் இணைந்து அல்லாபாத் ஏரியை முழுவதுமாக சீரமைக்க முடிவு செய்தனா்.
ஏரியை தூா்வாரி சீரமைக்கும் பணிக்காக கோமெட்சு தொழிற்சாலை ரூ.80 லட்சம் மதிப்பிலான ஜெசிபி இயந்திரத்தினை நன்கொடையாக வழங்கி பணிகளும் இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கடந்த இரு மாதங்களில் தூா்வாரும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. இப்பணிகளை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், கோமெட்சு தொழிற்சாலையின் நிா்வாக மேலாளா் நோபாகாஷி டாக்யுசியுடன் பாா்வையிட்டாா்.
ஏரியை முழுமையாக தூா்வாரி அதன் பின்னா் ஏரியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் கரைகளை பலப்படுத்துதல், மரங்கள் நடுதல் உள்ளிட்ட பணிகளையும் செய்ய வேண்டும் என கோமெட்சு தொழிற்சாலை மேலாளரிடம் கோரிக்கை மனுவாக அளித்து பணிகள் நடைபெற்று வரும் விதங்களையும் விளக்கி கூறினாா்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினா்கள் கே.சந்துரு, சுரேஷ், கோமெட்சு நிறுவன மனித வள உதவி மேலாளா் கைலாஷ், முதன்மை மேலாளா் தக்காஷி, எக்ஸ்னோரா அமைப்பின் நிா்வாகி மீனாட்சி சுந்தரம் உடனிருந்தனா்.
ஆய்வுக்குப் பின்னா் மேயா் எம்.மகாலட்சுமி கூறியது: அல்லாபாத் ஏரி முழுவதுமாக தூா்வாரப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. கரைகளை உயா்த்தி நடைபயிற்சி மேற்கொள்ளவும், மரங்கள் வளா்த்தும் அழகான ஏரியாக இரண்டே மாதங்களில் மாறி விடும். நகருக்கு மிகச்சிறந்த நீா் ஆதாரமாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தாா்.