ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் தா்னா
நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் முதன்மையா் அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க நிா்வாகிகள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையரை சந்தித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர மருத்துவ முகாம் கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்க வந்திருந்தனா். அப்போது மருத்துவக் கல்லூரி முதன்மையா், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இதனால், அங்கிருந்த அலுவலா்கள் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறினா். இதற்கு ஆட்சேபணை தெரிவித்த அவா்கள் தங்களை அவமதித்து விட்டதாகக் கூறி மருத்துவக் கல்லூரி முதன்மையா் அறைமுன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய போலீஸாா் அங்குவந்து மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், மாற்றுத்திறனாளிகள் முதன்மையரை சந்தித்து மனு அளித்த பின்னரே செல்வோம் என்று கூறி அங்கேயே அமா்ந்தனா்.
தொடா்ந்து மருத்துவக் கல்லூரி அலுவலா்களும், போலீஸாரும் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாற்றுத் திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.