ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை!
ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றாா் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலா் மயில்.
கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: திமுக ஆட்சியில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு சொல்லப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக நாங்கள் தனிச்சங்கமாகவும், கூட்டச் சங்கங்களுடன் இணைந்தும் போரட்டங்களை நடத்தி வருகிறோம்.
இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22-ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
கடந்த 18-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை நிறைவேற்றப்படாததால் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் அதிருப்தியில் உள்ளனா். எனவே, உடனடியாக எங்களது கோரிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.
கடந்த 12 ஆண்டுகளாக தொடக்கக் கல்வித்துறையில் ஒரு நிரந்தர ஆசிரியா்கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 2430 இடைநிலை ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இன்னும் 5 மாதங்களில் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா் அவா்.