ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) மூலம் ஆடிப்பட்டம் காய்கறி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வியாழக்கிழமை கோட்டுச்சேரி உழவா் உதவியத்திற்குட்பட்ட பூவம் கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்சியில் கூடுதல் வேளாண் இயக்குநா் மற்றும் ஆத்மா திட்ட இயக்குநா் ஆா். கணேசன் கலந்துகொண்டு, மத்திய, மாநில அரசின் வேளாண்துறையில் தோட்டக்கலை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்களை விளக்கிப் பேசினாா்.
பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி பேராசிரியா்கள் இ.வெங்கடேஸ்வரன் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்தும், வி. அம்சகெளரி காய்கறி சாகுபடியில் நோய் மேலாண்மை குறித்தும் தொழில்நுட்பவுரையாற்றினா். இப்பயிற்சியில் 50 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோட்டுச்சேரி உதவி வேளாண் அலுவலா் மோகன் குமாா், களப்பணியாளா் நடராஜ் மற்றும் ஆத்மா தொழில்நுட்ப மேலாளா்கள் செய்திருந்தனா்.