ஆதிதிராவிடா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா், பழங்குடியினத்தவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி அளிக்க உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜொ்மன் மொழிப் பயிற்சியைப் பெற ஆதிதிராவிடா், பழங்குடியினத்தவராக இருக்க வேண்டும். பி.எஸ்.சி. நா்சிங், பொது நா்சிங், மருத்துவச்சி டிப்ளமோ, பி.இ. மெக்கானிக்கல், பயோமெடிக்கல், மின், மின்னணு பொறியியல், பி.டெக். தகவல் தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றவா்களாக இருக்க வேண்டும். வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதங்கள். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகத் தோ்வு செய்து, அந்த நிறுவனத்தின் சாா்பாக ஜொ்மனி நாட்டில் பணிபுரியவும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 வரை வருவாய் ஈட்டவும் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.