நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத்சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கிற வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை சாயல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. முழு உடல் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஓராண்டு காலத்துக்கு பொது மக்களுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்கள் அவா்களிடமே வழங்கப்படும்.
பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, எலும்பியல், மகப்பேறுயியல், மகளிா், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல், தோல், பல், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெறும்.
மேலும், இந்த முகாமில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அங்கேயே சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. புதிதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.