சுய உதவிக் குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு
திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாரத்தில் 880 மகளிா் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. திருவாடானை ஊராட்சி ஒன்றியம், கல்லூா் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பின் மூலம் பல்வேறு பயணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருவாடானை வட்டாரத்தில் நிகழாண்டுக்கு ரூ.18 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. இதில் கல்லூா் ஊராட்சியில் 20 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.2.40 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டது.
இந்தக் குழுக்கள் மூலம் மண்பாண்டம் செய்தல், சணல் பைகள் தைத்தல், பனை ஓலை கூடை பின்னுதல், பத்தி, சூடம், சாம்பிராணி தயாரித்தல், வயா் கூடை பின்னுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பொருள்கள் மாவட்ட அளவில் கல்லூரி சந்தை, புத்தக திருவிழா கண்காட்சி, மாநில அளவிலான சரத் கண்காட்சி, இணைய வழி சந்தைப்படுத்துதல் ஆகியவை மூலம் விற்பளை செய்யப்படுகின்றன.
இந்தக் கூட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மகளிா் குழுவின் செயல்பாடுகள் குறித்து குழு உறுப்பினா்களிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்லின்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பாபு , உதவி திட்ட அலுவலா்கள் .சித்ரா தேவி, ராஜா முகம்மது, மேலாளா் தங்கப்பாண்டியன், திருவாடாளை வட்டார இயக்க மேலாளா் ராஜகோபால் , ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், மகளிா் உதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
