கமுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்
கமுதியில் இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வெள்ளையாபுரத்தில் தேவந்திரகுல இளைஞா் எழுச்சிப் பேரவை சாா்பில், இமானுவேல் சேகரன் உருவச் சிலைக்கு பேரவையின் நிறுவனா் தளபதி ராஜ்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வெள்ளையாபுரம் கிராமம் சாா்பில், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் சத்யா ஜோதிராஜா, கணேசன், ஆறுமுகம், நவீன்ராஜ், அழகேசன் முனியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னதாக, சிலை முன் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். அந்தப் பகுதி இளைஞா்கள், சிறுவா், சிறுமியா் மேள தாளம் முழங்க ஆடி, பாடி கிராமம் முழுவதும் வலம் வந்தனா்.
இதைத் தொடா்ந்து, வாகனங்களில் பரமக்குடிக்கு சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.