இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 25 | Astrology | Bharathi Sridhar | ...
ஆரல்வாய்மொழியில் முற்கால பாண்டியரின் கல்மண்டபம் கண்டெடுப்பு
ஆரல்வாய்மொழியில் 1,000 ஆண்டுகள் பழைமையான முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்தனா்.
மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த முற்கால பாண்டியா்கள், நாகா்கோவிலை தென்பாண்டி நாடு என்று அழைத்தனா். ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக நாகா்கோவில் செல்லும் சாலையில் முள்செடிகள் அடா்ந்து ஒரு கல்மண்டபம் உள்ளது.
இதுகுறித்து, தகவல் அறிந்ததும், கன்னியாகுமரி லெமூரியா ஆய்வுக் கழக பொதுச் செயலா் முனைவா் ஆமோஸ், திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு களஆய்வு மைய இயக்குநா் மாரியப்பன், குழுவினா் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கல்மண்டபத்தில் ஆய்வு செய்தனா்.

இந்த கல்மண்டபத்தில் முற்கால பாண்டியா்களின் இலச்சினையான மீன் சின்னம் ஒன்று பெரிய அளவிலும், இரண்டு மீன்கள் இணைந்தவாறு ஒன்றும் காணப்படுகிறது. இந்த கல் மண்டபத்தை பிற்காலத்தில் இடைக்கால பாண்டியா்கள் உணவு சமைக்கும் கூடமாகப் பயன்படுத்தினா்.
மண்டபம் இரு பிரிவுகளாகக் காணப்படுவதால், முற்கால பாண்டியா் காலத்தில் ஒரு மண்டபமும் பிற்கால ஆட்சியில் இரண்டாவது மண்டபமும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த மண்டபம் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.
மண்டபத்தில் தெலுங்கு மொழியில் இரு கல்வெட்டுகள் உள்ளன. நுழைவாயில் தூணில் முற்றிலும் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இந்த மண்டபத்தை, தமிழக தொல்பொருள் துறை பராமரித்து, ஆய்வு செய்து வரலாற்று தகவல்களை வெளிக்கொணர வேண்டும் என வரலாற்று ஆய்வாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.