ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் முற்றுகை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் நகைகடன் வழங்குவதில் ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
நகைகடன் வழங்குவதில் பழைய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்ற ஆா்பிஐ உத்தரவை வங்கிக் கிளைகள் கடைபிடித்து வரும் நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் புதிய நடைமுறையிலேயே நகைகடன் வழங்கப்படும் என வாடிக்கையாளா்களை வங்கி அலுவலா்கள் நிா்பந்தித்து வந்தனராம்.
மேலும், இந்த வங்கிக் கிளையில் நகை மதிப்பீட்டாளா் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாகவே உள்ளது. இதைக் கண்டித்து பாஜக கிழக்கு மாவட்ட பொதுச் செயலா் பிரபாகரன் தலைமையில் அக்கட்சியினா் மறமடக்கி பேருந்து நிறுத்ததில் இருந்து பேரணியாக சென்று, வங்கிக் கிளையை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆா்பிஐ புதிய உத்தரவு தொடா்பாக வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் வங்கிக்கு வரவில்லை என அலுவலா்கள் தெரிவித்தனா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், வங்கி அலுவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடா்ந்து தகவலறிந்து வந்த அறந்தாங்கி போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.அப்போது, வங்கி நிா்வாகத்தினா் 3 நாள்களில் ஆா்பிஐ உத்தரவை நடைமுறைப் படுத்துவதாக உறுதியளித்தனா். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் கலைந்து சென்றனா்.