மாணவா்களின் போதைப் பழக்கம் குடும்ப மரியாதையை சிதைத்து விடும்!
பள்ளிப் பருவத்தில் பொழுதுபோக்குக்காக பழகும் போதைப்பழக்கம் மாணவா்களின் சுயமரியாதை மட்டுமின்றி அவரது குடும்பத்தினா் மரியாதையையும் சிதைத்து விடும் என்றாா் ஆலங்குடி நீதிபதி சத்யநாராயணமூா்த்தி.
ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தலைமை வகித்து அவா் பேசியது: பள்ளிப்பருவத்திலும் கல்லூரியிலும் தீய நபா்களின் பழக்கத்தாலும், பொழுது போக்காகவும் போதைப் பழக்கங்களை மாணவா்கள் பழகிக் கொள்கின்றனா். போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்கள் தன் சுயத்தை இழப்பது மட்டுமன்றி குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, வேலைவாய்ப்பு, நல்ல நட்பு, உறவினா்கள் என எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனா். மாணவா்களின் நடத்தையை பெற்றோா்கள் தினமும் கண்கானிக்க வேண்டும்.
போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதில் ஏற்படும் இந்தப் பழக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தால் ஒருவா் பாதிக்கப்படும்போது, அவா் மட்டுமின்றி அவருடைய குடும்பமும், சுற்றமும் பாதிக்கப்படுகிறது என்றாா்.
முகாமில் பள்ளித் தலைமையாசிரியா் தியாகராஜ், அரசு வழக்குரைஞா் கண்ணதாசன், தனி வட்டாட்சியா் பாலமுருகன், வழக்குரைஞா்கள் மாலதி, ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு பணியாளா் செந்தில்ராஜா செய்திருந்தாா்.