எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை சென்றுள்ளார். கியர் ஸ்டாா்மா் பிரிட்டன் பிரதமரான பிறகு பிரதமா் மோடி பிரிட்டனுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடி விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். அதன்பின்னா், இரு பிரதமா்கள் முன்னிலையில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பிரிட்டன் வா்த்தக அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் (எஃப்.டி.ஏ.) கையெழுத்திட்டனர்.
லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின், கடந்த மே 6-ஆம் தேதி தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ.) இறுதி வடிவத்துக்கு வந்தது. இதன்கீழ், 2030-இல் இருதரப்பு வர்த்தகம் 120 பில்லியன் டாலர் என்ற உயர்நிலைக்கு இரட்டிப்பாகும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் முக்கிய பொருள்களான தோல், காலணிகள், துணிகள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியும் அதேபோல, பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் முக்கிய பொருள்களான விஸ்கி, ஜின், குளிர் பானங்கள், அழகு சாதனங்கள், இதர வேளாண் பொருள்கள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியும் குறக்கப்படும்.
பிரிட்டனில் தயாரிக்கப்படும் சில குறிப்பிட்ட ரக கார்களுக்கான வரி இந்தியாவில் 100 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக கணிசமாக குறைக்கப்படவுள்ளது. இரு தரப்பிலும் வர்த்தகத்தை எளிமைப்படுத்த மின்னணு முறையில் காகித பயன்பாடு அல்லாத முறையிலான வர்த்தகமும் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
எந்தெந்த பொருள்களின் விலை குறையும்?
பிரிட்டனில் இனி இந்திய ஜவுளிகளுக்கான விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஜவுளி பொருள்களுக்கான 8 - 12 சதவீத இறக்குமதி வரியை பிரிட்டன் அரசு நீக்கவுள்ளதால், திருப்பூர், சூரத், லூதியாணாவில் இருக்கும் ஏற்றுமதியாளர்கள் பலனடைவர். அதேபோல, தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் பிரிட்டனில் இனி விலை குறையும்.
இந்தியாவில் ஸ்காட்ச் விஸ்கி மீதான 150 சதவீத வரி 30 சதவீதமாக குறைக்கப்படுவதால், இங்கு அவற்றின் விலை குறைகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான வரி பிரிட்டனில் குறக்கப்படுகிறது. இதனால் இத்தொழில் சார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ள சென்னை, புணே, குருகிராம் உள்ளிட்ட பகுதிகள் பலனடையும்.
இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள பொறியாளர்கள், பட்டய கணக்காளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பிரிட்டனுக்கு செல்வதில் இனி சிரமம் இருக்காது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனெரிக் மருந்துகளுக்கு பிரிட்டனில் குறுகிய காலத்துக்குள் ஒப்புதல் வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசுமதி அரிசி, தேயிலை, நறுமண மசாலா பொருள்கள் இனி பிரிட்டனில் குறைந்த விலையில் கிடைக்கும். இவற்றுக்கான வரி தளர்த்தப்படுவதால் கேரளம், அஸ்ஸாம், குஜராத், மேற்கு வங்க விவசாயிகள் ஏற்றுமதியாளர்கள் பலனடைவர்.
வேதியியல் பொருள்களுக்கும் நெகிழிப் பொருள்களுக்கும் வரி குறைக்கப்படுகிறது. இதனால் குஜராத், மகாராஷ்டிர ஏற்றுமதியாளர்கள் அதிக பலனடைவர்.
இந்தியாவில் சோலார் திட்டங்கள், ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் பிரிட்டன் அதிக முதலீடு செய்ய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்கள், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், இன்வெர்டெர்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களுக்கு எவ்வித இறக்குமதி வரியும் இல்லை என்பதால் இந்திய நிறுவனங்களுக்கு மிகுந்த பலன் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் ஐ.டி. மற்றும் ஐ.டி. துறை சார் பிற பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் அத்துறைகளும் பலனடையும்.
முக்கியமாக இந்திய அரசின் டெண்டர்களில் இனி பிரிட்டன் நிறுவனங்கள் பரவலாக அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது.