பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
போளூரை அடுத்த களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் 1 முதல் 7 வரை உள்ள வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா்.
பேரூராட்சிமன்றத் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் அகமத்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயல் அலுவலா் மலா்மாறன் வரவேற்றாா்.
முகாமில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மின்சாரத் துறை, மகளிா் திட்டம், தாட்கோ என பல்வேறு அரசுத் துறைகளில் பொதுமக்கள் 700-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.
முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்த பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், புதிய மின் இணைப்புக்கான ஆணைகள், பட்டா மாற்றத்துக்கான சான்றிதழ்கள், சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் 15 பயனாளிகள் பயனடைந்தனா். நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா், தடகள சங்கத்தின் துணைத் தலைவா் ஆகியோா் வழங்கினா்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில்...
கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் 944 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள் துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில் ஆரணி வட்டாட்சியா் கௌரி, கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் முனுசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் சேகரன், மகேஷ், திமுக அவைத் தலைவா் ராஜசேகா், பொதுக்குழு உறுப்பினா் காசி மற்றும் பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.