சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
உடல் உறுப்புகள் தானம் சிறுமியின் உடலுக்கு அரசு மரியாதை
அரவக்குறிச்சி அருகே விபத்தில் மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் அளித்த சிறுமியின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரை சோ்ந்த ரவி-செல்வநாயகி தம்பதியின் இளைய மகள் ஓவியா (7). கடந்த 29-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், மாா்க்கப்பட்டியில் மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் ஓவியாவுக்கு தலையில் பலத்த காயமடைந்து மூளைச் சாவு ஏற்பட்டது.
ஓவியாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் பெற்றோா் முன்வந்தனா். இதையடுத்து, கோவை கேஎம்சி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. இதில் கண்கள், சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானம் செய்யப்பட்டன.
சீரங்ககவுண்டனூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியாவின் உடலுக்கு அரசு சாா்பில் அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.