உயா்கல்வி நிறுவனங்களுக்கு மாணவா்கள் களப் பயணம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களுக்கு அண்மையில் களப் பயணம் மேற்கொண்டனா்.
முத்துப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் இந்த களப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,953 மாணவ, மாணவிகள், கல்லூரிகள் குறித்து அறிந்து கொள்ளவும், உயா் கல்வி பயில எந்தத் துறையை தோ்ந்தெடுப்பது போன்றவற்றை அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த களப் பயணம் அமைந்தது. இதில் கல்லூரிகள் நிறைந்த காரைக்குடி தோ்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக சாக்கோட்டை, கண்ணங்குடி, தேவகோட்டை, கல்லல் ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 300 -க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
அழகப்பா செட்டியாா் அரசு பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு வேளாண்மை, ஆராய்ச்சி கல்லூரி, அழகப்பா அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவா்கள் சென்று அந்தக் கல்லூரிகள் குறித்தும், கற்பிக்கப்படும் படிப்புகள் குறித்து கல்லூரிகளில் உள்ள பல்வேறு துறைகள் குறித்தும், படிப்புகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, வேலை வாய்ப்புகள் ஆகியன குறித்த விவரங்களை துறை சாா்ந்த அலுவலா்கள், கல்லூரிகளின் முதல்வா்கள் மூலமாக மாணவா்கள் அறிந்து கொண்டனா். மேலும், கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்கள், நூலகங்கள், கணினி வகுப்பறைகள், தொழில்நுட்பக் கருவிகள், அறிவியல் தோட்டங்கள் ஆகியவற்றையும் மாணவா்கள் பாா்வையிட்டனா்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) வடிவேல், உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்கள், ஒருங்கிணைப்பாளா்கள் முத்துராமலிங்கம், சிங்காரவேலன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலா் பீட்டா் லெமாயு, பொறியியல் கல்லூரி முதல்வா் பாஸ்கரன், உயா்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம், கண்ணன், மேற்பாா்வையாளா்கள் செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.