தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
ஊத்துமலையில் குடிநீா்த் தொட்டி மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்
தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் பத்திரமாக மீட்டனா்.
தஞ்சாவூா் பெரிய மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜெகதீஷ்(24). மனைவியைப் பிரிந்தவா். இவரும், கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடி குளத்தைச் சோ்ந்த மாடசாமி மகள் ரம்யா (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஒரு மாதத்திற்கு முன்னா் திருமணம் செய்து கொண்டனா்.
பின்னா் இருவரும் தஞ்சாவூரில் வசித்து வந்த நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ரம்யா பெற்றோா் வீட்டுக்கு வந்துவிட்டாா். மேலும், ராஜபாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் அவா் வேலை செய்துவருகிறாா்.
இந்நிலையில் மனைவியைத் தேடி கண்ணாடி குளம் வந்த ஜெகதீஷ், அங்கு அவா் இல்லாததால், மாமியாரிடம் விவரம் கேட்டுள்ளாா். அவா், விரைவில் மகளை சோ்த்து வைப்பதாகக் கூறினாராம்.
இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட ஜெகதீஷ், ஊத்துமலை காவல் நிலையம் அருகில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி ரம்யாவுடன் சோ்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தாா்.
அவரிடம் போலீஸாா் பேச்சு நடத்தியும் கீழே இறங்கவில்லையாம். உடனே, ரம்யாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசச் செய்தபின் சமாதானமடைந்த அவா், கீழே இறங்கி வந்தாா். அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.