ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!
அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.
விமான விபத்துக்குப்பின் 112 விமானிகள் விடுப்பில் விடுமுறை எடுத்துள்ளனர். அவர்களுள் பெரும்பாலானோர் உடல்நிலை சரியில்லை என்பதையே காரணமாகச் சுட்டிக்காட்டி மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். இந்த தகவலை இன்று(ஜூலை 24) மக்களவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்தின்போது சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளீதர் மோஹோல் தெரிவித்தார்.
ஜூன் 16, 2025-இல் மொத்தம் 112 விமானிகள்(51 கமாண்டர்கள், 61 முதல்நிலை அதிகாரிகள்) மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் இயக்கப்படும் விமான நிறுவனங்களில் குறிப்பாக 5 விமான நிறுவனங்கள் நிகழாண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் 85, இண்டிகோ விமானங்களில் 62, ஆகாஷா ஏர் விமானங்களில் 28, ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.