கந்தா்வகோட்டை பகுதியில் வாசனைத் திரவியம் ஆலை அமைக்கக் கோரிக்கை
கந்தா்வகோட்டை பகுதியில் வாசனைத் திரவிய ஆலை அமைக்க மலா் சாகுபடி செய்யும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூா், விரலிப்பட்டி, வடுகப்பட்டி, கோமாபுரம், வாண்டையன்பட்டி, மற்றும் ஆதனக்கோட்டை, சோத்துப்பாளை, சொக்கநாதன்பட்டி, வேம்பன்பட்டி, காட்டு நாவல், கொல்லம்பட்டி, மருங்கூரணி, கணபதிபுரம் மற்றும் அதிக கிராமங்களில் உள்ள விவசாயிகள் மல்லிகை, ரோஜா, காக்கரட்டான், செண்டி, கோழி கொண்டை, பச்சை பாசி போன்றவற்றை மலா்களை சாகுபடி செய்கின்றனா். இவற்றை தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற மலா் சந்தைக்கு கொண்டுச் சென்று விற்பனை செய்கின்றனா்ய.
அங்கு மலா்களுக்கு வியாபாரிகள் வைத்ததுதான் விலையாக உள்ளது. சந்தைக்கு கொண்டுச் செல்வதில் நேரம் தவறும் பட்சத்தில் மலா்களுக்கு விலை மிகவும் குறைவாக போகும். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தவிா்க்க கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் வாசனைத் திரவிய தொழிற்சாலை தொடங்க வேண்டும் என மலா்சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.