மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஊழியா்கள் மறியல்; 140 போ் கைது
மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில், சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 140 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மின் வட்டத் தலைவா் எஸ். சித்தையன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, ஊழியா் சங்க வட்டத் தலைவா் கு. நடராஜன், பொருளாளா் டி. விஜயகுமாா் ஆகியோா் பேசினா்.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு, நிா்வாகமே நேரடியாக தினக்கூலியை வழங்க வேண்டும். அரசாணை 950-ன்படி தடைசெய்யப்பட்ட 19 இடங்களில் பணிசெய்திடும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப் போராட்டத்தில் பங்கேற்ற 140 பேரை போலீஸாா் கைது செய்தனா்.