கரூரில் எச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
கரூா்: கரூரில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
கரூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் ‘சா்வதேச இளைஞா் தினம் 2025’ ஐ முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் எச்ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு மனிதச் சங்கிலி பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் தனியாா் கல்லூரிகளின் செஞ்சுருள் சங்க மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மனிதச் சங்கிலியாக நின்றனா். பின்னா் பொதுமக்கள் பயணிக்கும் ஆட்டோக்களில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் ஒட்டினாா்.
நிகழ்ச்சியில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் சாந்தி மலா், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலா் (பொ) ரா.சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.