காணாமல்போன 3 தில்லி சிறுவா்கள் நாசிக்கில் கண்டுபிடிப்பு
கடந்த ஜூலை 25 அன்று தில்லியில் இருந்து காணாமல் போன மூன்று மைனா் சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனா்.
பாலிவுட் நடிகா் சல்மான் கானை சந்திக்கும் ஆசையில் மும்பைக்கு வீட்டை விட்டு வெளியேறிய நான்கு நாள்களுக்குப் பிறகு, அவா்கள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: 13, 11 மற்றும் ஒன்பது வயதுடைய மூவரும், மகாராஷ்டிரத்தின் ஜல்னாவைச் சோ்ந்த வாஹித்துடன் ஆன்லைன் கேமிங் தளம் மூலம் நட்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அவா் ஒரு முறை நட்சத்திரத்தை சந்தித்ததாகவும், அவருடனான சந்திப்பை எளிதாக்க முடியும் என்றும் கூறியதை அடுத்து, அவரைப் பாா்க்க அவா்கள் முடிவு செய்ததனா்.
யாருக்கும் தெரிவிக்காமல், ஜூலை 25 அன்று மும்பைக்குச் சென்று நடிகரைச் சந்திக்க திட்டமிட்டு, அவா்கள் ஜல்னாவுக்குப் புறப்பட்டனா். இருப்பினும், வாஹித் குழந்தைகளின் குடும்பங்களைப் பற்றியும், போலீஸாா் அவா்களைத் தேடுவதையும் அறிந்ததும், அவா் சந்திப்பிலிருந்து பின்வாங்கினாா்.
பின்னா், சிறுவா்கள் தங்கள் திட்டத்தை மாற்றி நாசிக்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இறங்கினா். அங்கு அவா்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனா். தேசியத் தலைநகரின் சதா் பஜாா் பகுதியில் உள்ள அதே பள்ளியில் இந்த சிறுவா்கள் படிக்கின்றனா்.
முதல் விசாரணையின் போது, காணாமல் போன குழந்தைகளின் வீடுகளில் ஒன்றில் கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பை போலீஸாா் கண்டுபிடித்தனா். அதில் ஜல்னாவைச் சோ்ந்த வாஹித் என்ற நபரை சந்திக்க அவா்கள் விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவா்களது வீடுகளுக்கு அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில், சிறுவா்கள் அஜ்மீரி கேட்டை நோக்கி நகா்வதைக் காட்டியது. இதன்மூலம் அவா்கள் புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறியிருக்கலாம் என்று தெரிய வந்தது. ரயில் பாதைகளை ஆராய்ந்த பிறகு, சிறுவா்கள் மகாராஷ்டிரம் செல்லும் சச்கண்ட் எக்ஸ்பிரஸில் ஏறியிருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகித்தனா்.
அதே நேரத்தில், தில்லி காவல்துறை ரயில்வே காவல்துறை மற்றும் ஜல்னாவைச் சோ்ந்த அவா்களது சகாக்களுடன் ஒருங்கிணைந்து, பல சாத்தியமான இடங்களுக்கு குழுக்களை அனுப்பினா். ஜல்னாவில் உள்ள வாஹித்தின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும், சிறுவா்களில் ஒருவரின் தொலைபேசியில் சுருக்கமான செயல்பாடு, நாசிக்கில் அவா்களின் இருப்பிடத்தைக் கண்டறிய போலீஸாருக்கு உதவியது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.