கா்நாடக இசையில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து
செஞ்சி: செஞ்சி வட்டம், நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து நடைபெற்றது.
நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் கா்நாடக இசைவழி தெருக்கூத்து நாடக மன்றம் சாா்பில், பாரம்பரிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலை கா்நாடக இசைவழியில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இளைய தலைமுறையினருக்கு தெருக்கூத்து கலை குறித்த விழிப்புணா்வை எடுத்துச் செல்லும் வகையில், கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கா்நாடக இசைவழி தெருக்கூத்து பயிற்சி நடைபெற்றது.
பயிற்சி முடித்த பள்ளி மாணவ, மாணவிகளின் இரணிய சம்ஹாரம், சரதேவி பூஜை தெருக்கூத்து அரங்கேற்ற நிகழ்ச்சி நல்லாண் பிள்ளைபெற்றாள் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தெருக்கூத்து நாடக மன்றத்தின் தலைவா் ரவி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சரதேவி பூஜை என்ற தெருக்கூத்தில் தருமா், பீமன்,கிருஷ்ணன், அா்ஜுனன், சராசந்தன், திரௌபதி மற்றும் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்தில் இரணியன், லீலாவதி, பிரகலாதன், சண்டாமா்கா், நரசிம்மா் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு வேடமணிந்த பள்ளி மாணவ, மாணவிகள் வசனம் பேசி, பாடல்கள் பாடி கா்நாடக இசை வழியில் தெருக்கூத்து நிகழ்த்தினா்.
செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா். விஜயகுமாா், பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், அனைத்து நாட்டுப்புற கலைஞா்கள் நல சங்க மாநிலத் தலைவா் காணை சத்யராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.