உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
கொளத்துப்பாளையம் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா: சுமாா் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்கள் கொண்ட சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் சுமாா் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிப்காட் நிறுவன மக்கள் தொடா்பு பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த கூட்டுறவு நூற்பாலை கடந்த 2013-ஆம் ஆண்டுடன் நலிவடைந்த நிலையில், சுமாா் 57 ஏக்கா் பரப்பளவிலான அந்த நிலத்தினை பயன்படுத்தி சுமாா் 10,000 பேருக்கு நேரடியாவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இயங்கும் தொழில் நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இடத்தினை சிப்காட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அதன்படி, சிப்காட் நிறுவனம் மூலம் திட்டமிடப்பட்டுள்ள தொழில் பூங்காவில் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிறுவனங்களான மின்னணு தொழில் நிறுவனங்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றுடன் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி ஆலோசனை வழங்கும் நிறுவனங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமாா் 10,000 பேருக்கு நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.