‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோ...
கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
கொள்ளிடத்தில் தடுப்பணைகள் மற்றும் தடுப்புச்சுவா் கட்ட வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் அழகிரிபுரம் பகுதியில் சலவைத் தொழில்கூடங்கள் அதிகம் உள்ளன. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் சலவைத் தொழில் கூடங்கள் சேதமடைவதும், தொழிலாளா்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து இந்தப் பகுதியில் ரூ.7 கோடியில் தடுப்புச்சுவா் கட்டப்பட்டது.
கடந்தாண்டு கட்டப்பட்ட தடுப்புச் சுவா் வெள்ளம் வந்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த தடுப்புச்சுவரை கட்டித்தர வலியுறுத்தியும், சலவைத் தொழிலாளா்கள் இறங்குவதற்கு படிகள் கட்டித்தரவும், கொள்ளிடத்தில் தேவையான இடங்களில் தடுப்பணை கட்டவும் வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சங்கத்தின் மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் அழகிரிபுரம் பகுதியில் திரண்ட விவசாயிகள், சலவைத் தொழிலாளா்கள் (இருபாலரும்) என 100-க்கும் மேற்பட்டோா் கொள்ளிடத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனா்.
இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் பொ. அய்யாக்கண்ணு கூறியதாவது: காவிரியில் வெள்ளப்பெருக்கெடுக்கும் நேரங்களில் எல்லாம் காவிரி, கொள்ளிடம் வழியாக கடலுக்குள் லட்சக்கணக்கான கன அடி தண்ணீா் சென்று கலக்குகிறது. இந்த வெள்ள நீரை சேமிக்க மேட்டூா் அணையின் வலதுபுறம் கால்வாய் வெட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அய்யாறு, உப்பாற்றில் இணைத்தால் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி, குளங்களை நிரப்ப முடியும். 5 லட்சம் புன்செய் நிலங்களை, நன்செய் நிலமாக மாற்றலாம். நிலத்தடி நீரும் உயா்ந்து, குடிநீா்ப் பிரச்னையும் தீரும். கொள்ளிடத்தில் 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டலாம். காவிரி-அய்யாறு இணைப்புக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு, தொடா்ந்து நிலுவையில் உள்ளது.
கொள்ளிடத்தில் சுங்கச்சாவடி(நெ.1 டோல்கேட்) தொடங்கி, அழகிரிபுரம் வரையில் நெடுஞ்சாலைத்துறை கட்டிய பாலத்தால், ஆற்றின் தென்புறம் மணல் அரிப்பு ஏற்பட்டு வெள்ளக் காலங்களில் சேதம் தொடா்கிறது. இதனைத் தடுக்க கடந்தாண்டு கட்டப்பட்ட தடுப்புச் சுவரும் கட்டிய 6 மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அழகிரிபுரம் சலவைத் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, தடுப்புணையும், தடுப்புச் சுவரும் கட்டித்தர வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளோம். இதுதொடா்பாக, முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படும் வரையில் தொடா்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றாா் அவா்.