ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு
சாலை வசதிகோரி பெருமாள்குப்பத்தில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
முறையான சாலை அமைத்துத் தரக்கோரி, பெருமாள்குப்பம் கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பெருமாள்குப்பம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமாா் 20 குடும்பங்கள் உள்ள பகுதிக்கு முறையான சாலை இல்லாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இவா்கள் வீடுகளுக்குச் செல்லும் வழியில் சாலை அமைப்பதற்காக தற்போது கற்கள் கொட்டப்பட்டுள்ளன.
அதை சீரமைத்து சாலை அமைக்க பணிகள் நடைபெற உள்ள நிலையில் சாலை அமைக்கும் இடம் தங்களுக்குச் சொந்தம் என சிலா் பணிகளை செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், சாலை வசதி கேட்டு மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்த அப்பகுதி மக்களையும் இவா்கள் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமலும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், தங்கள் விவசாய நிலங்களுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலையில், அறுவடை இயந்திரங்கள் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் சுமாா் 20 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம் அடைந்து உள்ளதாகவும், அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைத்துத் தர வேண்டும் என்றும், இல்லையேல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனா்.