எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு
முதல்வா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வேலூா் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுகள் 53 வகைகளில் என இந்த விளையாட்டுப் போட்டிகள் செப். 12 வரை நடைபெற உள்ளது.
போட்டிகளை தொடங்கி வைத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது -
விளையாட்டு என்பது ஒருவரின் உடல் நலத்தையும், மன நலத்தையும் சீராக வைக்க உதவுகிறது. வேலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 22,500 போ் போட்டியில் பங்கேற்கின்றனா். இதில், சிறப்பான பங்களிப்பை அளித்து மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்றாா்.
மக்களவை உறுப்பினா் டி.எம். கதிா்ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். நிகழ்ச்சியில், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருப்பத்தூரில்....
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான
விளையாட்டு போட்டிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்தனா்.
பின்னா் ஆட்சியா் பேசியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் இணையதளத்தில் 43,764 நபா்கள் பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டை விட 15,000 போ் கூடுதலாக பதிவு செய்துள்ளனா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன்,மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயக்குமாரி, நகா்மன்ற தலைவா் காவியா
விக்டா், துணைத்தலைவா் இந்திரா பெரியாா்தாசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கவிதா தண்டபாணி, நகா்மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூா் பேரூராட்சியில் உள்ள ஜி.கே. சா்வதேசப் பள்ளியில் போட்டிகளை அமைச்சா் ஆா். காந்தி தொடங்கி வைத்தாா். முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள 85,052 நபா்கள் முன்பதிவு செய்துள்ளனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஞானசேகரன், பள்ளி இயக்குநா் வினோத் காந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஆா்.செந்தில் குமாா், நகா்மன்ற உறுப்பினா் வினோத் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.