செய்திகள் :

சின்ன வெங்காயம் - சிறுகதை

post image

காலையில் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்ட குமரன், காலையில் வீட்டிற்கு வந்த செய்தித்தாளை கூட படிக்க நேரமில்லாமல், அதை கூடவே எடுத்துச் சென்றான்.

அங்கு சென்ற சற்று நேரத்தில், ஒரு முக்கிய வேலைக்காக சென்னையின் முக்கியமான வணிக வளாகத்திற்கு போய் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டின் மார்க்கெட்டிங் மானேஜரை பார்த்துட்டு வர சொன்னார் அவனது பொது மேலாளர்.

சரி என்று விரைவாக கிளம்பி அங்கு சென்ற குமரன், அந்த மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டின் அலுவலகத்தின் முன்பாக நின்று அங்கிருந்த பணிப் பெண்ணிடம் தான்  வந்திருப்பதை சொல்லிவிட்டு காத்திருந்தான்.

அப்போது அங்கு தொங்கிக் கொண்டிருந்த செய்தித்தாளில் "வெங்காய விலை வீழ்ச்சி" என்று கொட்டை எழுத்தில் போடப் பட்டிருந்ததை பார்த்தான். அப்போது அங்கு வந்த கஸ்டமர்களில் சிலர், அப்பாடா வெங்காய விலை குறைஞ்சிருக்காம். இன்னைக்குப்  போய் நாலஞ்சு கிலோ வெங்காயம் வாங்கிப் போடணும். அதுவும் சின்ன வெங்காயம், உடம்புக்கு ரொம்ப நல்லது" என்று பேசிக் கொண்டே உள்ளே சென்றனர். 

அதைப் பார்த்த குமரனுக்கு, வெங்காயம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ருசியையும் அனுபத்தையும் கொடுக்கிறது. விவசாயிகளுக்கான அனுபவத்தையம், பிரச்னையையும் எப்போதும் மற்றவர்களால் உணர முடிவதில்லை என்று தனது சிந்தனையை பின்னோக்கி ஒட்டத் தொடங்கினான். சிறு வயதில், தனது கிராமத்தில் அப்பா அம்மாவோடு வாழ்ந்த விவசாய வாழ்க்கை அவனது எண்ண ஓட்டத்தை மிக வேகமாக ஓட வைத்தது.

காலை எழுந்தவுடன் தங்களது தோட்டத்துக்குச் சென்று, அங்குள்ள ஒவ்வொரு பயிரையும் பார்ப்பதில் குமரனுக்கு அலாதி பிரியம். அங்கு செல்லாமல் அவனுடைய நாள் தொடங்குவதில்லை. அதிலும் அந்தந்த காலத்தில் போட்டிருக்கும் பயிரை பார்த்துப் பார்த்து வளர்ப்பதில் குமரனுக்கு அவ்வளவு ஆர்வம். 

 அதுவும் அந்த நவம்பர் மாதத்தில் போடப்படும் வெங்காயப் பயிரை பார்ப்பதில் குமரனின் மனது கொண்டாட்டத்தில் குதூகலிக்கும். வெங்காயம் நடவு நட்ட நாளில் இருந்து அவன் தினமும் காலையில் தோட்டத்திற்குப் போய், ஒவ்வொரு வெங்காயமும் முளை விடும் அழகை பார்த்துப் பார்த்துப் பரவசப் படுவான். அதோடு நில்லாமல், அப்பாவிடம் ஓடிப் போய், "அப்பா அப்பா இன்னிக்கு இத்தனை வெங்காயம் முளைச்சிருக்குப்பா. ரெண்டு தாள் வளர்ந்திடுச்சுப்பா" என்று சொல்லி மகிழ்வதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

அதோடு விடுவானா, அளவுகோல் வைத்து அளக்காத குறையாக, "எங்க தோட்டதுத்தில வெங்காயம் அரை விரல் வளர்ந்துடுச்சு, முழு விரல்  அளவுக்கு வளர்ந்துடுச்சு" என்று சொல்லி சொல்லி நண்பர்களிடம் மகிழ்வான்.

 இந்த ஆண்டும் அதே போல் மகிழ்ச்சியில் திளைத்தான். அந்தப் பயிர் வளர்வதை தினமும் சென்று பார்ப்பதும், அதன் மீது அக்கறை எடுத்துக் கொள்வதும் அவனது அன்றாட காலை பழக்கமானது. பள்ளிக்குச் சென்று மாலை திரும்பியதும் மீண்டும் சென்று பார்ப்பது வழக்கமானது. சில நாட்களில், காலை பள்ளிக்கு செல்லுமுன் முடிந்த அளவுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு செல்வதையும் பழக்கமாக்கினான்.

அந்த வெங்காயப் பயிர் வளர வளர அவனது ஆனந்தம் அளவுக்கு அதிகமானது. அதன் தாளின் உயரத்தையும், வெங்காயத்தின் தடிமன், நிறத்தையும் பார்க்கத் தொடங்கினான். இந்த இரசனை மட்டும் தெரியுமே தவிர மற்றபடி வெங்காயச் சாகுபடியில்  உள்ள பிரச்சனைகள் அவனுக்கு அவ்வளவு தெரியாது.

 அதற்கு எப்போதெல்லாம் உரம் வைக்கணும், பூச்சி மருந்தடிக்கணும், களை எடுக்கணும் என்று எதுவும் தெரியாது. அது மட்டுமில்லை எவ்வளவு பணம் செலவாகும் என எதுவும் தெரியாது.

அப்பா, அவ்வப்போ சொல்வதை, பேசுவதை வைத்து, கொஞ்சம் தெரிந்து கொள்வான். பிறகு அவரிடமே, எல்லாம் தெரிந்தவன் போல் சொல்லுவான். அதைக் கேட்டு அவனுடய்ய அப்பாவுக்கு "குமரன் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கான்" என்று போலி பெருமை பேசுவார். அதை கேட்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி மகிழ்ச்சி அடைவான்.

இதற்கு இடையில், பயிர் கொஞ்சம் வளர்ந்ததும் களை எடுக்கச் சொன்னார் அப்பா. அன்று மாலையே அம்மா சென்று அதற்கு வேலை ஆட்களுக்கு சொல்லிவிட்டு வந்தார். மறு  நாள் காலையில் ஒரு பத்துப் வேலையாட்கள் வந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு களை எடுக்கப் போனார் அம்மா. குமரனுக்கு, இருப்புக் கொள்ளவில்லை. பின்னாடியே தோட்டத்திற்கு ஓடினான்.

களை எடுக்கும் வேலையை பார்க்கத் தொடங்கினான். களை  எடுப்பதற்க்காக வயலுக்கு உள்ளே சென்ற மாரியம்மா அத்தயையும், குப்பாயி பாட்டியையும் சத்தம் போட்டான் குமரன்.

"வெங்காயப் பயிரை பார்த்துப் போங்க. களை எடுக்கிறேன் என்று பயிரை வெட்டிடாதீங்க, மிதிச்சும் போடாதீங்க" என்று சத்தம் போட்டான். அதை கேட்டு, சாமி கவலை படாத ஓன் வெங்கத்துக்கு ஒன்னும் ஆகாது என்று சமாதான படுத்தினர். அப்புறம்தான் அமைதியானான் குமரன். 

வயலுக்கும் சென்று பார்ப்பதும், அதற்கான வேலைக்குச் பார்ப்பதும் என்று சில வாரங்கள்  ஓடின. அடுத்து சில நாட்காளில், பச்சை பசேலென்று விறைப்பாக இருந்த வெங்காய பயிர்கள் கொஞ்சம் நிறம் இழந்து வெளுப்பாக, தளர்வாக போய்விட்டது.

அதைப் பார்த்து அப்பாவிடம் "என்னப்பா இப்படி வெங்காயப் பயிர் வாடி வதங்கிப்  போச்சு" என்று வருத்தம் கொள்வான்.

அவனது அப்பாவும், "அதற்கு ஏதோ சீக்கு வந்திருக்கு. அதனால இந்த பூச்சி மருந்து அடிச்சா சரியாகிடும்" என்று சொல்வார். அதோடு மட்டுமில்லாமல் அந்த பூச்சி மருந்து தெளிப்பதற்கான வேலைகளையும் ஆரம்பித்து விடுவார். மருந்து அடிச்ச வெங்காய பயிரெல்லாம் பாவமில்லையா? அதுவும் சேர்ந்து பாதித்திக்காதா? என்பான் குமரன். இல்லையில்லை, வெங்காயப் பயிரை மருந்து ஒன்னும் செய்யாது, பூச்சிகளை மட்டும் கொல்லும் என்று ஆறுதல் படுத்துவார் அப்பா.

ஒரு நாள் பக்கத்து நகரத்தில் போய் பூச்சி மருந்தை வாங்கி வருவார். அடுத்த நாள் மருந்தடிக்கும், கருவி வைத்திருக்கும் முருகனை அழைத்து மருந்தை தெளிக்க சொல்வார்.

முருகன் வந்தவுடன், அப்பாவும், குமரனும் சேர்ந்து மருந்தை தண்ணீரில் கலக்கி அவரிடம் கொடுத்துவிட்டு, குடம் குடமாக தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பார்கள். அதற்குள் சாப்பாடு செய்யும் வேலையெல்லாம் முடித்துவிட்டு, அவனது அம்மா வந்து விடுவார்.

அவரிடம் எல்லா வேலையையும் ஒப்படைத்துவிட்டு அப்பாவும், மகனும் அவரவர் வேலையை பார்க்க கிளம்பி விடுவார்கள். போகும் போதே, அம்மாவிடம் ரெண்டாவது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சல் பாக்கி இருக்குன்னு சொல்லிவிட்டு போவார் அப்பா. பிறகு, மருந்து அடிச்சி முடிச்சிட்டு பகல் முழுவதும், தண்ணீர் பாய்ச்சும் வேலையையும், களை  எடுக்கும் வேலையையும் தொடர்வார் அம்மா. அதோடு தோட்டத்திற்குள் ஆடு மாடு நுழைந்து விடாமல் காவலும் பார்ப்பார்.

இப்படி போய் கொண்டிருக்கையில் சில நாட்களில் அதே வெங்காயப் பயிரில், மீண்டும் ஏதோ சுணக்கம். என்னப்பா, இப்பத்தான் மருந்து அடிச்சோம் அதுக்குள்ள திரும்பி பயிரெல்லாம் ஏதோ மாதிரி இருக்கு என்று வினவினான் குமரன். அது தம்பி, மருந்து அடிச்சதெல்லாம் சரிதான், ஆனா அதுக்கு தேவையான சத்து இல்ல என்றார் அப்பா.

இப்ப என்ன செய்யிறது என்ற கேட்ட குமரனுக்கு, உரம் போடணும், சரியாகிடும் என்று பதில் சொன்னார் அப்பா. அதோடு, செலவை பத்தியும் புலம்ப ஆரம்பித்தார். நிலத்தை உலக ஆரம்பித்ததில் இருந்து, விதை வெங்காயம் வாங்கியது, அதை நட்டது, தண்ணீர் பாய்ச்சியது, களை எடுத்தது, மருந்து அடிச்சது மீண்டும் களை எடுத்து என்று எல்லா செலவுகளையும், செஞ்ச உழைப்பையும் சொல்லிவிட்டு, இன்னு உரம் வைக்க வேற இவ்வளவு பணம் வேண்டுமே என்று புலம்பினார். 

அதை கேட்ட பிறகுதான் குமரனுக்கு புரிந்தது வெங்காயத்தின் உள்பக்கம். அதோடு, கவலை படாதப்பா செஞ்ச செலவெல்லாம் போக நிறைய பணம் கிடைக்கும் என்று பெரிய மனிதன் போல் ஆறுதல் சொன்னான் அப்பாவுக்கு. சரி சாமி என்று ஆறுதல் அடைந்தார் அப்பா.

 நாட்கள் ஓட ஓட வெங்காயப் பயிர் மீதான ரசனை மட்டுமின்றி கவலையும் அதிகமாகியது குமரனுக்கு. அப்பாவின் புலம்பல்கள் அவ்வப்போது குமரனின் காதில் விழுந்து கொண்டே இருந்தது. 

 இதற்குள் வெங்காயப் பயிரின் தாள்கள் எல்லாம் பச்சை நிறத்தில் இருந்து காய்ந்து வெளுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த குமரன், முகம் மாறாத தொடங்கியது. அப்பாவிடம், என்னப்பா வெங்காயத் தாளெல்லாம் வெளுக்குது , திரும்பவும் மருந்து அடிக்கணுமா? என்று கேட்டான். அதற்கு இல்ல தம்பி, வெங்காயம் எல்லாம் வெளஞ்சுடுச்சு. இன்னு அறுவடை செய்ய வேண்டியதுதான், மருந்து அடிக்க வேண்டியதில்லை என்றார் அப்பா. இதை கேட்ட குமரனுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தருந்தது.

மகன் குமாரனிடம் சொல்லிவிட்டு செலவுக் கணக்கை போட துவங்கினார் அப்பா. இவ்வளவு செலவு ஆகியிருக்கு, இந்த விலை கிடைச்சா நமக்கு ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றார். அதோடு, இன்னும் ஒரு வாரத்தில், வெங்காயத்தை அறுவடை செய்துடலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அப்பா.

 அடுத்து அறுவடைக்காக காத்திருக்க தொடங்கினான் குமரன். இதற்கிடையில்,    அறுவடைக்குத் தேவையான வேலையாட்களை தேடத்  தொடங்கினார் அம்மா. அடுத்த வாரமும் வந்தது. ஒரு நாள் காலை, ஏறக்குறைய இருபது வேலை ஆட்கள் வந்திறங்கினர். வெங்காய வயலுக்குள் சென்று, அறுவடையை தொடங்கினர். குமரனும், வயலுக்குள் இறங்கி ஆவலோடு வேலையே தொடங்கினான். அப்பாவும், அம்மாவும் ஏப்பா குமரா, பள்ளிக்கு போய்விட்டு வந்து சாயந்திரம் இந்த வேலையெல்லாம் பாரு, இப்போ நீ கிளம்பு என்றனர். இல்லம்மா, நான் இன்னிக்கு பள்ளிக்கு போகல, இங்கேயே இருக்கேன் என்றான். இல்லையில்லை , நீ போய்விட்டு சாயந்திரம் வா என்றனர் அம்மாவும், அப்பாவும்.

குமரன், உடனே போய் குளித்து விட்டு, அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினான். எப்போதும் போல் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து பள்ளியை அடைந்தான். பள்ளிக்கு சென்றாலும், அவனது ஞாபகம் முழுவதும் வெங்காய வயலிலேயே இருந்தது. எப்போது, சாயந்திரம் நாலரை மணி ஆகும், பள்ளி முடியும் என்று காத்திருந்தான். சரியாக நாலரை மணிக்கு ஒரே ஒரு மணி அடித்த உடனே பையை தூக்கிக் கொண்டு கிளம்பினான். ஓட்டமும், நடையுமாக விரைந்து வீட்டுக்குக் கூட போகாமல் நேராக தோட்டத்திற்கு வந்து சேர்ந்தான்.

 வயலில் ஆங்காங்கே வெங்காயத் தாள்கள் குவிந்து கிடந்தன. வேலையாட்கள் எல்லாரும் வீட்டுக்கு சென்று விட்டனர். அம்மா மட்டும் வயலின் ஓரத்தில் இருந்தார். நேராக அம்மாவிடம் ஓடினான். என்னம்மா எங்கே வெங்காயம் எல்லாம் என்று கேட்டான்.

மற்றொரு வயலில் குவித்து வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை அம்மா காட்டினார். ஓடிப்போய் வெங்காயப் குவியலை சுற்றிச் சுற்றி வந்தான். அவனது முகத்தில் ஒரு அளவில்லாத மகிழ்ச்சி உருவானது. சற்று நேரத்தில் அப்பாவும் வந்து சேர்ந்தார்.

"குமரா, வேலை எல்லாம் முடிஞ்சு போச்சு. நீயும் அம்மாவும் வீட்டுக்குப் போங்க. அம்மா சோறு ஆக்கட்டும். நீ பொய் புத்தகத்தை எடுத்துட்டு வந்து இங்கே வந்து படி. அதோட எனக்கு பாய், தலைகாணி எல்லாத்தையும் கொண்டு வந்திடு. நான் இங்கேயே காவக் காத்திட்டு இருக்கேன்" என்றார் அப்பா.

குமரனும், அப்பா சொன்ன படியே, வீட்டுப் போய், சாப்பாடு எல்லாம் முடித்து விட்டு, மற்ற பொருட்களையும் எடுத்துக்கிட்டு வந்தான். அவனிடம் இருந்த பொருட்களை எல்லாம் வாங்கி வைத்துவிட்டு, பாயை எடுத்து விரித்தார். அதில் பார்த்தால் ரெண்டு பாய் இருந்தது. என்னப்பா, எதுக்கு ரெண்டு பாய் என்று கேட்ட அப்பவிடம், நானும் இங்கேதான் தூங்கப் போறேன் என்றான் குமரன்.

இல்லையில்லை, இங்கு குளிர் காத்து அடிக்கும், பூச்சி எல்லாம் வரும் என்று சொன்ன அப்பாவிடம், அதெல்லாம் முடியாது, நானும் உங்க கூட இங்கேயே வெங்காயத்தை காவக் காக்கிறேன் என்று அடம் பிடித்தான். குமரனின்  பிடிவாதத்தை மாற்ற முடியாது துன்று தெரிந்த அப்பா சரிடா என்றார். அப்போ போய் சாப்பிட்டு வந்திடு என்றார். நான் சாப்பிட்டு விட்டுத்தேன் வந்தேன் என்றான். 

சரி என்று சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் பேசிவிட்டு தூங்க தயார் ஆகினர் அப்பாவும் மகனும். சற்று நேரத்தில் திடீர் என்று லேசாக மழை தூர ஆரம்பித்தது. திடுக்கிட்டு எழுந்த அப்பாவிடம், என்னப்பா என்றான் மகன். மழை வருது, நெனைஞ்சா வெங்காயம் எல்லாம் வீணாகிப் போயிடும் . நான் இங்கே வெங்காயத்தை குவித்து வைக்கிறேன். நீ ஓடிப்போய் வெங்காயம் நனையாமல் இருக்க, மூடி வைக்க தார்ப்  பாயும் பிளாஸ்டிக் பாயையும் எடுத்துக்கிட்டு வா என்று சொல்லிவிட்டு படபடவென்று வேலையை தொடங்கினார். குமரன், அடி வயிறு கலங்க ஓடினான்.

வரப்பு தட்டி கீழே விழுந்ததையும். அந்த சத்தம் கேட்டு பார்த்து சூதானம் என்று சொன்ன அப்பாவின் குரலையும் கேட்காமல் ஓடினான். வீட்டுக்குப் பொய் அம்மாவை அவசர படுத்தி,  தார்ப்  பாயையும் பிளாஸ்டிக் பாயையும் எடுத்துக்கிட்டு பதைபதைக்க ஓடி வந்தான். என்னடா தம்பி, இவ்வளவு வேகமா ஓடி வந்திட்ட என்று கேட்ட அப்பாவின் குரலையும் பொருட்படுத்தாமல் தானும் சேர்ந்து வெங்காயத்தை குவிக்கத் தொடங்கினான். வெங்காயம் நனைந்துவிடக் கூடாது என்று குமரனும், அப்பாவும் சேர்ந்து மின்னல் வேகத்தில் குவித்து, தார்பாய்களை கொண்டு மூடினர்.  அதன் பிறகுதான் அவர்கள் இருவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது. மழையில் நனையாமல் இருக்க தாங்களும் ரெண்டு பிளாஸ்டிக் பைகளை வைத்து மூடிக் கொண்டனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் கழித்து மழை நின்ற பிறகுதான் தூங்க தொடங்கினர்.

மீண்டும் அதிகாலை எழுந்து, வெயில் வர ஆரம்பித்ததும், தார்பாய்களை எடுத்துவிட்டு வெங்காயப் குவியலை மட்டப்படுத்தி விட்டனர். பிறகு வெயில் அதிகமானதும் இன்னும் அதிமாக பரப்பிவிட்டு காற்றாட விட்டனர். இதே போல் ஒரு நான்கு நாட்கள் பாதுகாப்பாக வைத்தப்  பிறகு வெங்காயத்தை கொண்டுபோய் மார்க்கெட்டில் விற்பதற்கான வேலையே தொடங்கினார் அப்பா. 


குமரனுக்கு ஒரே மகிழ்ச்சி. அப்பாவுடைய கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும், கை  நிறைய பணம் கிடைக்கும், தனக்கும் நிறைய தின்பண்டங்கள் வாங்கி வருவார் அப்பா என்று மகிழ்ச்சியில் துள்ள தொடங்கினான். அதோடு விடாமல், மார்க்கெட்டுக்கு புறப்பட்ட அப்பாவிடம், எனக்கு திங்க வாங்கிட்டு வாங்கப்பா என்று ஞாபகப்படுத்தினான்.

அப்பா புறப்பட்டுச் சென்ற பிறகு, அப்பா எப்போது வருவார் என்று கணக்குப் போடத் துவங்கினான். மாலை ஆக ஆக அவனது மனம் அலைப்பாய துவங்கியது. அம்மாவிடம் பொய், "என்னம்மா இன்னும் அப்பாவ காணோம். இப்பத்தான் வருவாரு?" என்று நச்சரிக்கத் தொடங்கிய, மகனை, "பொறு பொறு பஸ் வர வேண்டாமா? பொறுமையா காத்திரு" என்று அமைதிப் படுத்தினர் அம்மா. 


இரவு ஒன்பது மணிக்கு பஸ் வந்ததும், ஊர் மந்தை வரை ஓடிப்போய், மகிழ்ச்சி தாளாமல் அப்பாவை அழைத்து வந்தான். வீட்டுக்கு வந்த பிறகுதான் பார்த்தான், அப்பாவின் முகத்தில் அவ்வளவு செழுமை இல்லை. சற்று கவலைக் கோடுகள் காணப்பட்டன.

இருந்தாலும், பையில் இருந்த பையை  எடுத்துக் கொடுத்த அப்பாவிடம், ஏம்ப்பா என்ன ஆச்சு? என்று கேட்க ஆரம்பித்தான். அதெல்லாம் ஒண்ணுமில்லை என்று கூறினாலும், அவனது தொடர் கேள்விகளை கேட்க முடியாமல், "இல்ல தம்பி. மழை வந்துட்டதால நிறைய வெவசாயிக, வெங்காயத்தை கொண்டு வந்துட்டாங்க. வெங்காயத்தை அதிக நாள் வைக்க முடியாது. அதனால விலை ரொம்ப கொறஞ்சு போச்சு. கணக்குப் போட்டுப் பார்த்தா நட்டந்தான் வருது" என்று சொல்லி விட்டு கண் கலங்கிய அப்பாவை பார்த்து தானும் கலங்கினான். 


தனது கவலைச் சுமையை பிள்ளை மேல் போட்டு விடக் கூடாது என்று, மனைவி பக்கம் திரும்பி "அந்தப்   பொட்டலத்தில இருக்கிற லட்டுவையும் முறுக்கையும் எடுத்து தம்பிக்கு கொடு. பாவம் பசியோடு இருப்பான்" என்றார் அப்பா. பையை எடுத்து, பொட்டலத்தை பிரித்து, இந்தப்பா லட்டு என்று கொடுத்த அம்மாவிடம் சுரத்தே இல்லாமல் வாங்கினான் குமரன்.

தின்பண்டங்களை பார்த்ததும் அவன் கண்ணில் தோன்றும் மகிழ்ச்சி வரவில்லை. உற்சாகம் இல்லாமலேயே வாங்கி வாயில் வைத்துக் கொண்டே கேட்டான் "ஏம்ப்பா இப்ப என்ன செய்வது. வாங்கிய கடனை கட்டணுமே, வட்டி வேற கேட்பாங்களே" என்றான்.


கொப்பளித்து வந்த கண்ணீர்  அடக்கிக் கொண்டு, குமாரனைப் பார்க்காமல், மனைவியின் பக்கம் திரும்பிக் கொண்டு "அதை சமாளிச்சுக்கலாம் தம்பி" என்று ஆறுதல் வார்த்தை கூறிவிட்டு, தன்னை ஆறுதல் படுத்த முடியமால் தவித்தார். ஏதோ சொல்ல வந்த மனைவியிடம், விடு விடு, காலையிலே இருந்து சந்தைக்கு அலஞ்சுதல ரொம்ப சோர்வா இருக்கு, தூங்கலாம் " என்றார்.

சாப்பாடு என்று கேட்ட மனைவியிடம் மவுனத்தை மட்டுமே பதிலாக்கிவிட்டு பாயை எடுத்து போட்டார். படுத்து விட்டாலும், குமரன் தூங்கிய பிறகு மனைவியிடம் தனது புலம்பலை கொட்டி விடுவதற்காக காத்திருந்தார். ஒரு அரை மணி நேரத்திற்குப் பிறகு, மனைவி பக்கம் திரும்பி உள்ளக் குமுறலை கொட்டத் தொடங்கினார்.

தூக்கம் வராமல் தவித்த குமரன் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் அவர்களது புலம்பலை கேட்டு தவித்தான். அதே கவலையோடு தூங்கி போனான். அதிகாலை சேவலின் குரல் கேட்டு கண் விழித்த குமரன், அப்பா அம்மா இருவரும் வீட்டில் இல்லாததை பார்த்து பதறிப் போய் அம்மா அம்மா என்று குரல் கொடுத்தான். 

வீட்டை விட்டு வெளியே வந்து தெரு முனை வரை ஓடி வந்து அம்மா அம்மா என்று கத்தினான். அங்கிருந்த மூக்காயி பாட்டி "டேய் குமாரா ஏன் இந்த கத்து கத்துற? அவுக ரெண்டு பேரும் அந்த மேற்குத் தெரு சந்தானம் வீட்டு வரைக்கும் போயிருக்காங்க, கொஞ்ச நேரத்தில் வந்துருவாக" என்றார்.  அப்படியா பாட்டி என்று சரி என்று சொல்லிவிட்டு திரும்பிய குமரன் "ஏன் பாட்டி விடிஞ்சவுடனே போயிருக்காக" என்று கேட்ட குமாரனிடம், அந்த பாவத்தை ஏன்டா கேக்குற? கரிச காட்டுல பருத்தி போட்டிருந்தான் சந்தானம்.

அதுக்கு ஏகப்பட்ட கடனை வாங்கியிருந்தான். ஆனா அது சரியா வராம நட்டமாகி  போச்சு.  அத  தாங்க முடியாம பால்டாயலை குடிச்சிட்டான்டா" என்று சொன்ன, மூக்காயி பாட்டியை பார்த்து அதிர்ச்சியானான் குமரன்.  கலவரத்தோடு கவலையில் மூழ்கிய குமரனுக்கு, அவனுக்கும் தெரியாமல் மனதில் ஏதோ ஆறுதல் ஏற்பட்டது. 

"டேய் குமரா. என்ன தேமே நின்னுக்கிட்டு இருக்க. போடா, போய் குளிச்சுட்டு, பள்ளிக்கு கூடத்திற்கு ரெடியா இரு. வருஷா வருஷம் இப்படி பத்துப் பேராவது போய்ட்டுத்தானே இருக்காங்க. நம்ம பொழப்பு அவ்வளுவுதான் " என்று கூறிய மூக்காயி பாட்டியை பார்த்துக் கொண்டே அமைதியாய் நடந்தான். 

 திடீரென்று சார், உங்களை மேனேஜர் கூப்பிடுறார் என்று சொன்ன பணிப்பெண்ணின் குரல் கேட்டு சகஜ நிலைக்குத் திரும்பிய குமரனுக்கு, இந்த விலை வீழ்ச்சி எத்தனை விவசாயிகளை வீழ்த்தியுள்ளதோ என்ற கவலையோடு எழுந்து சென்றான்.

 வெங்காயம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும், ருசியையும்  கொடுக்கும். விவசாயிகளுக்கான அனுபவத்தை, கஷ்டத்தை எப்போதும் மற்றவர்களால் உணர முடிவதில்லை...

-அருட்செல்வன் சிறீராம் 

வீரம், அறம், காதல்... வேள்பாரியில் உங்களைக் கவர்ந்த விஷயம்! - உலகுக்கு சொல்லுங்கள் | My Vikatan

ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களுடன் 'வீரயுக நாயகன் வேள்பாரி' தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்பு குறையாத மனதுடன் அதை வாசித்தார்கள். தமிழ் மக்களின் கருணை, ... மேலும் பார்க்க

தங்க வளையல்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

விருப்பம் இல்லாத திருமணம் ஏற்படுத்திய மாற்றம்! | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் காதல் கண்மணி! - ஜில்லுன்னு ஒரு லவ் ஸ்டோரி | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் கல்யாண சாப்பாட்டைப் பற்றி நக்கலாக பேசும் போது ஏற்படும் வலி! - 90ஸ் திருமண அனுபவம் | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

குட்டிம்மா - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க