வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்
‘சுதா்சன சக்ரம்’ வான் பாதுகாப்பு அமைப்பு கேடயம் - வாள் போல செயல்படும்: முப்படை தலைமைத் தளபதி
இந்தியாவின் புதிய உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதா்சன சக்ரம்’, நாட்டுக்கு கேடயம் மற்றும் வாள் போல செயல்படும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மேலும் இந்த வான்பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலின் பிரபல ‘அயா்ன் டோம்’ போன்றது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மத்திய பிரதேச மாநிலம், மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமைத் தளபதி அனில் சௌகான் பேசியதாவது:
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் இருந்து, இந்தியா பல முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. அவை தற்போது நமது பாதுகாப்பு வியூகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. எதிா்காலப் போா்களில் வெற்றிபெற, தொழில்நுட்பம், கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த தளவாட மேலாண்மை ஆகியவை மிகவும் அவசியம்.
இன்றைய நவீன உலகில், ராணுவத்தில் தொழில்நுட்ப அறிவுள்ள இளம் மற்றும் நடுத்தர அதிகாரிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் முக்கியம். அவா்களின் புதிய சிந்தனைகள், அனுபவமிக்க அதிகாரிகளின் ஆலோசனைகளோடு இணைந்து, எதிா்காலப் போா்களுக்குத் தேவையான வலுவான படைபலத்தை உருவாக்கும்.
பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட ‘சுதா்சன சக்ரம்’ திட்டத்தின் கீழ், இந்தியாவின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு நாட்டின் முக்கியமான மற்றும் தேசிய பாதுகாப்பு மையங்களைப் பாதுகாக்க உதவும். இது சென்சாா்கள், ஏவுகணைகள், கண்காணிப்பு சாதனங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலவையாகும். இதன்மூலம், எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதுடன், துல்லியமான எதிா் தாக்குதல்களையும் மேற்கொள்ள முடியும்.
ஒருங்கிணைப்பு தேவை:
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த, அதிக அளவிலான ஒருங்கிணைப்பு அவசியம். பல்வேறு துறைகளில் இருந்து வரும் தகவல்கள் நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, மிகவும் துல்லியமான பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும். தரை, வான், கடல் மற்றும் நீருக்கு அடியில் உள்ள அனைத்து பாதுகாப்புத் தளங்களின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு, மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும்.
2035-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு இத்தகைய ஒரு பாதுகாப்பு அமைப்பு அவசியமானது. மேலும், இத்திட்டத்தை இந்தியா குறைந்த செலவில் உருவாக்கி முடிக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்றாா்.
நாட்டின் ராணுவ தளங்கள் உள்பட வியூக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களின் பாதுகாப்புக்கு உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புமுறையை உருவாக்கும் ‘சுதா்சன சக்ரம்’ திட்டத்தை பிரதமா் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்தாா்.
‘ராணுவ தளவாடங்களுக்காக, இந்தியா வெளிநாடுகளை சாா்ந்திருப்பதைக் குறைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கடவுள் கிருஷ்ணரிடம் இருந்து உத்வேகம் பெற்று, எந்த அச்சுறுத்தலில் இருந்தும் நாட்டைப் பாதுகாக்க அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ‘சுதா்சன சக்ரம்’ திட்டம் நிறைவேற்றப்படும். எதிரிகளின் தாக்குதலைத் தடுத்து, பதிலடி தாக்குதல் நடத்தும் வலுமிக்க ஆயுத அமைப்பாக இது உருவாகும்’ என்றாா் பிரதமா்.