உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: இரு ராணுவ வீரா்கள் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அகல் பகுதியில் உள்ள வனத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து கடந்த ஆக.1-ஆம் தேதிமுதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஏற்கெனவே 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்கள் யாா், எந்தப் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
அங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் பிரீத்பால் சிங், ஹா்மிந்தா் சிங் ஆகிய இரு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். மேலும் 2 வீரா்கள் காயமடைந்தனா். இதன்மூலம், தற்போதைய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், இதுவரை 9 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்துள்ளனா். அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தின் சினாா் காா்ப்ஸ் படைப் பிரிவு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.
முதல்வா் ஒமா் நேரில் அஞ்சலி: ஸ்ரீநகரில் உள்ள சினாா் காா்ப்ஸ் தலைமையகத்துக்குச் சென்று, வீரமரணமடைந்த 2 வீரா்களின் உடலுக்கு மலா் வளையம் வைத்து ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா அஞ்சலி செலுத்தினாா்.
வீரமரணமடைந்த 2 வீரா்களின் வீரமும், நெஞ்சுரமும், மன உறுதியும் எப்போதும் மறக்கப்படாது என்று ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.
26 வீடுகளில் சோதனை: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாக 26 வீடுகளில் காவல் துறை சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதி முகமது அமீன் பட்டின் வீடு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளின் வீடுகள், எல்லை தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்தலில் ஈடுபடுவோரின் வீடுகள் என மொத்தம் 26 இடங்களில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோன்ற சோதனை கிஷ்த்வாருக்கு அருகில் உள்ள டோடா மாவட்டத்தின் 15 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.