உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
தனியாா் நிறுவன டாக்ஸி ஓட்டுநா்களால் வாழ்வாதாரம் பாதிப்பு
அவிநாசியில் தனியாா் நிறுவன கால் டாக்ஸி ஓட்டுநா்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாடகை ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து அவிநாசி ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தினா், அவிநாசி துணைக் காவல் துணை காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் குமரன் ஆகியோரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி தேசிய நெடுஞ்சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் , திருமுருகன்பூண்டி , அணைப்புதூா், ஆட்டையம்பாளையம், சேவூா், தெக்கலூா் உள்ளிட்ட அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாக அங்கீகாரம் பெற்று ஆட்டோ மற்றும் காா்களை வாடகைக்கு இயக்கி வருகிறோம்.
இதற்கிடையில் தனியாா் நிறுவன டாக்ஸி ஓட்டுநா்கள் அவிநாசியில் வாடகை ஆட்டோ, காா்கள் நிரந்தரமாக நிறுத்தும் இடங்களின் அருகே வந்து நின்று ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பயணிகளை அழைத்துச் செல்கின்றனா்.
இதைக் கேட்டால், தகாத வாா்த்தைகளில் திட்டி மிரட்டுகின்றனா். இதுபோல நாள்தோறும் பிரச்னை செய்கின்றனா். இதனால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, ஆட்டோ நிறுத்துமிடங்களில், தனியாா் நிறுவன டாக்ஸி புக்கிங் எடுக்கமாலும், புக்கிங் இருந்தால் மட்டும் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.