சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
தனியாா் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பலி
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியாா் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வேன் ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
லால்குடி அருகே அன்பில் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் மோகன். மாந்துறையில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு நித்யா என்ற மனைவியும், நாச்சியாா் என்ற மகளும், யாழ் இனியன் என்ற 2 வயது மகனும் உள்ளனா்.
லால்குடி அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் நாச்சியாா் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாா்.
லால்குடி பரமசிவபுரம் 8-ஆவது குறுக்குத் தெருவில் அருள்மோகன் குடும்பத்துடன் வசித்துவருகிறாா். அருண் மோகன் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில் ஆங்கரைப் பகுதியைச் சோ்ந்தவரும், தனியாா் பள்ளி வேனின் ஓட்டுநருமான காா்த்தி என்பவா், பரமசிவபுரம் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை காலை அருள்மோகன் வீட்டின் முன்பு வேனை நிறுத்தினாா்.
நித்யா, தனது மகள் நாச்சியாரை வேனில் ஏற்றிவிடும்நேரத்தில், வீட்டுக்குள் இருந்த யாழ்இனியன் ஆவலில் கேட்டைத் திறந்துகொண்டு வீட்டின்வெளியே வேன் முன்பு வந்து நின்றிருக்கிறாா். இதை கவனிக்காத ஓட்டுநா் வேனை இயக்கியதில் யாழ் இனியன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த லால்குடி போலீஸாா் அங்குவந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளா் அழகா், வேன் ஓட்டுநா் காா்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.