எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?
திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு வசதியாக, திருமலை அன்னமய்ய பவனுக்கு எதிரே புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையத்தை செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் திறந்து வைத்தனா்.
ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் பெறுவதற்கு, பக்தர்கள் அதிகாலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்த வருவதாக, நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னை, இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இனி இருக்காது. ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த மையத்தில், பக்தர்கள் விரைவாகவும் எளிதாகவும் டிக்கெட் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவாணி தரிசனம் யாருக்கு?
திருப்பதி திருமலை கோயிலில், பராமரிப்பு, உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீவாணி அறக்கட்டளையானது, திருமலை ஏழுமலையான் பக்தர்கள் பலரும் அளிக்கும் நன்கொடை மூலமாகவே செயல்பட்டு வருகிறது.
எனவே, தன்னுடைய செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருக்கும், நன்கொடை அளிக்கும் பக்தர்களை கௌரவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதே ஸ்ரீவாணி தரிசனம். அந்த வகையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் நன்கொடை அளிக்கும் பக்தர்கள், சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதுதான் ஸ்ரீவாணி தரிசனம்.
இந்த ஸ்ரீவாணி தரிசன முறையில், நாள்தோறும் சரியாக 1000 பேருக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதனை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக மையங்களுக்கு வந்தும் பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்டமாக, திருமலை மற்றும் ரேணிகுண்டா விமான நிலையங்களில் தலா ஒரு டிக்கெட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், திருமலை திருப்பதி கோயிலில், தற்போது ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விநியோக மையம் திறக்கப்பட்டுள்ளது. இது, ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் பணியை துரிதப்படுத்தும் என்பதால் நன்கொடை வழங்கும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.