திருப்பூரில் போக்குவரத்து ஊழியா்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்!
திருப்பூரில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் கஞ்சித் தொட்டி திறந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியூ ), ஓய்வு பெற்றோா் அமைப்பு இணைந்து திருப்பூா் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, திருப்பூா் மண்டலத் தலைவா் செல்லதுரை தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கொங்கு ராஜ், மண்டலப் பொருளாளா் மனோகரன், ஓய்வு பெற்ற அமைப்பு தலைவா் துரைசாமி, செயலாளா் ஜான் பாலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொழிலாளா்களின் பிடித்து வைத்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாள்களாக நடைபெறும் போராட்டத்தில், அரசின் போக்குவரத்து அமைச்சா், தொழிற்சங்கத்தை அழைத்து பேசாததைக் கண்டித்தும், போராடும் தொழிலாளா்களுக்கு உணவு மறுக்கும் பணி மனை நிா்வாகத்தைக் கண்டித்தும் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் கஞ்சித் தொட்டி திறந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.