தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: 'அமைச்சர் சேகர் பாபுவுடன் பேச விருப்பமில்லை' - போராட்டக் குழுவினர்
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நேற்று நள்ளிரவில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு அமைச்சருடன் பேச விருப்பம் இல்லை என்றும், அதிகாரிகளுடன் பேசவே விரும்புவதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் போராட்டக் குழுவுடன் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நீண்ட இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்த அமைச்சர் சேகர் பாபு கடுமையாகவும் பேசியிருந்தார். 'பணி நிரந்தரம் தரோம்னு நாங்க எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லையே...' எனப் பேசியிருந்தார்.
அமைச்சரின் இந்த ஸ்டேட்மெண்ட்டும் பேச்சுவார்த்தை அறைக்குள் அவர் பேசிய சில விஷயங்களும் போராட்டக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியது.

சங்கடம் ஏற்படுவதை தவிர்க்க விரும்புகிறோம்
இன்று மதியம் 2 மணிக்கு மேல் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த போராட்டக் குழுவினர், 'அரசுத் தரப்பு அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைகளுன் பலன் தருமா எனத் தெரியவில்லை. ஒருவேளை திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த நினைத்தால் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதே நல்லது. அமைச்சருக்கு எங்களின் நன்றியையும், பரஸ்பரம் சங்கடம் ஏற்படுவதை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம் என்பதையும் தெரியப்படுத்துங்கள்.' எனக் கூறியிருக்கின்றனர்.